
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா பயிற்சி போட்டிகளில் 1 விளையாடி வருகிறது. அந்த நிலைமையில் ஐசிசி நடத்தும் அதிகாரபூர்வ பயிற்சி கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தனது முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 17ஆம் தேதியன்று அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. புகழ்பெற்ற காபா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 186/7 ரன்கள் குவித்தது.
இந்தியாவுக்கு 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேஎல் ராகுல் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (33) ரன்கள் குவித்து அவுட்டாக மறுபுறம் தடுமாறிய ரோகித் சர்மா அடுத்த ஓவரிலேயே 15 (14) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கி அதிரடி காட்ட முயன்ற விராட் கோலி 19 (13) ஹர்திக் பாண்டியா 2 (5) தினேஷ் கார்த்திக் 20 (14) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
மிரட்டிய ஷமி:
அதனால் தடுமாறிய இந்தியாவுக்கு 4வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (33) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதன்பின் 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் பின்ச் உடன் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் மிச்செல் மார்ஷ் 35 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மிடில் ஓவர்களில் ஸ்டீவ் ஸ்மித் 11 (12) கிளன் மேக்ஸ்வெல் 23 (16) மார்கஸ் ஸ்டோனிஸ் 7 (7) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் ஆரோன் பின்ச் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (54) ரன்கள் குவித்து போராடிய போது ஹர்ஷல் படேல் வீசிய 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அதுவரை பீல்டிங் மட்டுமே செய்து கொண்டிருந்த முகமது சமி முதல் முறையாக பந்து வீசினார்.
அதில் முதலிரண்டு பந்துகளில் தலா 2 ரன்களை கொடுத்த அவர் 3வது பந்தில் பட் கமின்ஸை 7 (6) ரன்களில் அவுட்டாக்கினார். அடுத்த பந்தில் ஆஸ்டன் அகர் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் கடைசி 2 பந்துகளில் ஜோஸ் இங்கிலீஷ் 1, கேன் ரிச்சர்ட்சன் 0 ஆகியோரையும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய ஷமி வெறும் 4 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஃபார்ம் போதுமா:
கடைசியாக கடந்த டி20 உலக கோப்பையில் விளையாடியிருந்த முஹமது ஷமியை 30+ வயதாகி விட்டார் என்பதற்காக கழற்றிவிட்ட தேர்வுக்குழு ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளித்தது. அதில் அவர்கள் சொதப்பியதால் 2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 20 விக்கெட்டுகளை சாய்த்து குஜராத் முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ஷமிக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் ஆசிய மற்றும் உலகக்கோப்பை அணிகளில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்த அவர் சமீபத்திய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சேர்க்கப்பட்டாலும் துரதிஸ்டவசமாக கரோனாவால் விலகினார்.
இருப்பினும் காயத்தால் வெளியேறிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் தேர்வாக காத்திருந்த தீபக் சஹரும் காயத்தால் வெளியேறியதால் கடைசி நேரத்தில் முகமது சமி உலகக்கோப்பை வாய்ப்பை பெற்றார். ஆனால் கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச டி20 போட்டியில் விளையாடாத அவருடைய பார்ம் பற்றி தெரியாது என்பதால் முகம்மது சிராஜுக்கு வாய்ப்பளிக்குமாறு கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா பயணித்து நேற்று வலைப்பயிற்சியில் மட்டுமே விளையாடிய முகமது ஷமி இப்போட்டியில் கடைசி ஓவரில் முதல் முறையாக பந்து வீசி இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். அப்படி சந்தேகித்தவர்களுக்கு இந்த பார்ம் போதுமா என்று நிரூபித்துள்ள அவரை வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டுகின்றனர். மேலும் அனுபவமும் உலகத்தரம் வாய்ந்த தாம் பும்ராவுக்கு பதிலாக விளையாட தகுதியானவன் என்பதையும் அவர் இன்று நிரூபித்துள்ளார்.