மாரடைப்பால் காலமான பிரபல ஐசிசி அம்பயர் – கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் சோகத்துடன் இரங்கல்

Asad Rauf Umpire
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல முன்னாள் அம்பையர் அசாத் ரவூப் மாரடைப்பால் நேற்று லாகூரில் இயற்கை எய்தினார். 2000 – 2010 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அம்பயராக மிகச் சிறப்பாக செயல்பட்ட இவர் ஐசிசி எலைட் பேனல் பிரிவில் இடம் பெற்ற கௌரவம் வாய்ந்த நடுவர் ஆவார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக செயல்படத் துவங்கிய இவர் 64 டெஸ்ட் போட்டிகளிலும், 139 ஒருநாள் போட்டிகளிலும், 28 டி20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்ட பெருமைக்குரியவர். அதற்கு முன்பாகவே பாகிஸ்தானில் உள்ள ரயில்வேஸ் மற்றும் நேஷனல் பேங்க் ஆகிய அணிகளுக்காக 71 உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இவர் 2006இல் ஐசிசி எலைட் பேனல் பிரிவில் இடம் பிடித்தார்.

மொத்தமாக உள்ளூர் கிரிக்கெட்டில் 71 போட்டிகளில் விளையாடிய இவர் 3423 ரன்களையும் 40 லிஸ்ட் ஏ போட்டிகளில் 611 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் 40 உள்ளூர் போட்டிகளிலும் 26 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் நடுவராக செயல்பட்ட இவர் 89 ஐபிஎல் டி20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டார். ஆனால் 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் நடுவராக செயல்பட்டு வந்த இவர் மீது கடந்த 2013இல் சூதாட்ட புகார் சுமத்தப்பட்டது. அந்த சர்ச்சையில் சிக்கியதால் அந்த ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் 2013இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி ஐசிசி தொடரிலும் வெளியேறினார். அதன் காரணமாகவே ஐசிசி எலைட் பேனல் பிரிவில் இருந்தும் இவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

- Advertisement -

தலைகீழான வாழ்க்கை:
அப்படி அடுத்தடுத்த பின்னடைவை சந்தித்த இவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2016இல் 5 ஆண்டுகள் அதிரடியான தடையும் விதித்தது. அதனால் கிரிக்கெட்டிலிருந்து அடையாளம் தெரியாமல் போகும் அளவுக்கு வெகுதூரம் சென்ற இவர் சமீபத்தில் பாகிஸ்தானின் லாகூரில் ஒரு சாதாரண துணி கடை நடத்தி வரும் செய்திகள் வெளியானது. ஒரு காலத்தில் ரசிகர்களிடம் புகழ்பெற்ற நடுவராக செயல்பட்ட இவர் தவறான வழியில் சென்ற காரணத்தால் தெருவோரத்தில் சாதாரண துணி கடையும் பாத்திர கடையும் நடத்தி வந்தது நிறைய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

ஆனால் தன் மீது பிசிசிஐ வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து அந்த சமயத்தில் பேட்டி கொடுத்திருந்த அவர் தன்னுடைய நடுவர் வாழ்க்கை வீணாவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் பொருளாதார பிரச்சினைகள் எதுவுமின்றி தனது மன மகிழ்ச்சிக்காக தெருவோரத்தில் கடை நடத்தும் வேலை செய்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் 66 வயதிலேயே காலமானதாக தற்போதைய செய்திகள் வெளியாகியுள்ளது அனைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இது பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளது பின்வருமாறு. “அசாத் ரவூப் இயற்கை எய்தியதை கேட்டு சோகம் அடைந்துள்ளேன். அவர் நல்ல நடுவராக செயல்பட்டது மட்டுமல்லாமல் எப்போதும் கலகலப்புடன் பேசும் குணத்தை கொண்டவர். மேலும் நான் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் எனது முகத்தில் சிரிப்பை கொண்டு வரக்கூடிய தன்மை கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இத்துடன் கம்ரான் அக்மல், ஜுனைட் கான் போன்ற நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ஷான் டைட் போன்ற வெளிநாட்டு வீரர்களும் அவரது மறைவிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே இதே போல் மாரடைப்பால் உலகை விட்டு பிரிந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?

ஆனால் அடுத்த மாதமே மற்றொரு ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இயற்கை எய்தியது சோகத்தின் மேல் சோகத்தை கொடுத்தது. அத்துடன் பிரபல தென்னாப்பிரிக்க அம்பயர் ருடி கோர்ட்சின் கடந்த மாதம் மறைந்த நிலையில் தற்போது 2000 – 2010 வரையிலான காலகட்டத்தில் பிரபல நடுவராக இருந்த இவரும் உலகை விட்டுப் பிரிந்துள்ளது நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களுக்கு மேலும் சோகமான செய்தியாக அமைந்துள்ளது.

Advertisement