இந்த ஐ.பி.எல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய பிளாப் XI அணி – லிஸ்ட் இதோ

ipl-2021-ind

ஐபிஎல் 14வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இத்தொடர் ஆரம்பித்த பாதியிலேயே, வீரர்கள் பலருக்கு கொரானா தொற்று உறுதியானதால், மீதமிருக்கும் போட்டிகளை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது பிசிசிஐ. மொத்தம் 60 போட்டிகள் நடைபெற வேண்டிய இத்தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடெபெற்றுள்ளது. இருப்பினும் நடைபெற்று முடிந்துள்ள இந்த 29 போட்டிகளிலேயே யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அதே சமயம், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை ஆடி அவர்களுடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளனர். அப்படி இத்தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, சொதப்பிய 11 வீரர்களை கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டேவிட் வார்னர் : கடந்த பல சீசன்களாகவே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி, ஐபிஎல் தொடரில் மூன்று முறை ஆரஞ்சு கேப்பை கைப்பற்றியிருந்த டேவிட் வார்னர், இத்தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் அந்த அணியை வழி நடத்தும் கேப்டன் பொறுப்பிலும் கோட்டைவிட்டதால், ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

சுப்மன் கில் : கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்த சுப்மன் கில், ஐபிஎல் தொடரில் அசத்தலாக ஆடி இந்திய டி20 அணியிலும் இடம் பிடிப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், தான் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கிய அவர் அந்த அணிக்காக எந்த ஒரு சிறப்பான சம்பவத்தையும் செய்யாமல் சோடைபோயிருக்கிறார்.

- Advertisement -

நிகோலஸ் பூரான் : 2020 ஐபிஎல் ஏலத்தின்போது 4.2 கோடி கொடுத்து நிகோலஸ் பூரானை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த வருடம் மட்டுமே சிறப்பாக விளையாடிய அவர், இத்தொடரில் விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 போட்டிகளில் டக் அவுட்டாகி அந்த அணிக்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கிறார். அடுத்த சீசனில் பஞ்சாப் அணிக்கு அவர் வேண்டாம் என்று இப்போதே, அந்த அணியின் ரசிகர்கள் செல்லும் அளவிற்கு இருந்திருக்கிறது அவருடைய பர்ஃபார்மன்ஸ்.

இஷான் கிஷன் : :இந்தியா இங்கிலாந்துக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில், புதுவரவாக இந்திய அணியில் இடம்பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷன், முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதே பேட்டிங் ஃபார்மை இந்த ஐபிஎல்லிலும் தொடர்வார் என்று எதிர்பார்த்தபோது, இத்தொடரின் ஆரம்ப போட்டிகளில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியதால், கடைசி சில போட்டிகளில் மும்பை அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். தன்னுடைய தேச அணிக்காக மட்டுமே சிறப்பாக செயல்படுவேன் என்று சத்தியம் ஏதாவது செய்து விட்டு வந்தாரா என்று தெரியவில்லை,

இயான் மோர்கன் : பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே சம பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை தனது மோசமான கேப்டன்சி மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்கினால் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா : களத்தில் ஆக்ரோஷமாக மட்டும் செயல்பட்டால் போதாது, பேட்டிங்கிலும் ஏதாவது செய்ய வேண்டுமென்று தன் அணியின் ரசிகர்கள் அறிவுரை சொல்லும் அளவிற்கு இந்த தொடரில் மோசமாக செயல்பட்டிருக்கிறார் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இத்தொடரில் அவர் ஒரு ஓவர்கூட வீசவில்லை என்பதையும் தாண்டி 7 போட்டிகளில் பேட்டிங் விளையாடிய அவர் ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 16 ரன்கள் தான்.

ஷிவம் துபே : இந்த ஆண்டு பெங்களூர் அணி மேக்வெல்லை ஏலத்தில் எடுத்தது எப்படி சிறப்பான முடிவு என்று எல்லோராலும் பாராட்டப்பட்டதோ அதேபோல் ஷிவம் தூபேவை அணியிலிருந்து வெளியேற்றியதும் மிக சிறப்பான முடிவு என்றே கூற வேண்டும். ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட தூபே, தான் எதற்காக அணியில் இருக்கிறோம் என்பதை அவரே மறத்துவிட்டதைப்போல் இத்தொடரில் விளையாடியிருக்கிறார்.

ஷர்துல் தாக்கூர் : இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் விக்கெட் எடுத்து தந்த சென்னை அணியின் பௌலரான ஷர்துல் தாக்கூர், இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய எகானமி ரேட்டும் இந்த தொடரில் 10க்கு மேல் இருக்கிறது.

புவேனேஷ் குமார் : கடந்த சீசனில் காலில் ஏற்பட்ட காயத்தினால் அத்தொடரிலிருந்தே வெளியேறிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணயின் பௌலரான புவேனேஷ் குமார், காயத்திலிருந்து மீண்டு வந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பந்து வீசி அத்தொடரில் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார். ஆனால் இத்தொடரில் ஐதராபாத் அணிக்காக பந்து வீசி 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறார்.

யுஸ்வேந்திர சஹால் : இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசினால் தான், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருந்த பெங்களூர் அணியின் ஸ்பின் பௌலர் யுஸ்வேந்திர சஹால், இந்த தொடரில் அதை செய்யத் தவறியதோடு மட்டுமல்லாமல், இந்திய டி20 அணியில் தனது இடத்தையும் இழக்க தயாராகி விட்டார் என்றே தெரிகிறது. 7 போட்டிகளில் பந்து வீசி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கும் சஹாலின் எகானமி ரேட் 8.26 ஆகும்.

ஜெய் ரிச்சார்ட்சன் : இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியால் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரரான ஜெய் ரிச்சார்ட்சன், அந்த அளவு தொகைக்கு எல்லாம் நான் வொர்த் இல்ல என்பதுபோல் இந்த தொடரில் பந்துவீசியுள்ளார். இத்தொடரில் பஞ்சாப் அணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே பந்து வீசியுள்ள ரிச்சார்ட்சன், 10.63 எகானமி ரேட்டுடன் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து அந்த அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறார்.

இந்த ஐ.பி.எல் தொடருக்கான முதல் பாதி பிளாப் அணி XI இதோ :

1) வார்னர், 2) சுப்மன் கில், 3) நிகோலஸ் பூரான், 4) இஷான் கிஷன், 5) இயான் மோர்கன், 6) ஹர்திக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) ஷர்துல் தாக்கூர், 9) புவேனேஷ் குமார், 10) யுஸ்வேந்திர சஹால், 11) ஜெய் ரிச்சார்ட்சன்

Advertisement