ஒருநாள் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் ஓய்வுபெற இந்தியா தான் காரணமாம் – அவரே கூறியுள்ள பின்னணி இதோ

Stokes
- Advertisement -

இங்கிலாந்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த 2011இல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் தனது சிறப்பான செயல்பாடுகளால் 2013 முதல் 3 வகையான இங்கிலாந்து அணியிலும் முதன்மை வீரராக உருவெடுத்து பேட்டிங், பவுலிங் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்தார். அதில் கடந்த 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் அசத்திய அவர் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84* ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்று இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதை காலத்திற்கும் மறக்க முடியாது.

அதனால் உலக அளவில் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக போற்றப்பட்டு வந்த அவர் சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் முதல் தொடரிலேயே டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை மண்ணை கவ்வ வைத்த இங்கிலாந்து 3 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வென்று இந்தியாவுக்கு எதிராக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியிலும் 378 ரன்களை சேசிங் செய்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து மிரட்டியது.

- Advertisement -

பணிச்சுமை:
அதை தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில் ஓய்வெடுத்த அவர் கடைசியாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றார். இருப்பினும் அந்த தொடரில் 0, 21, 27 என சுமாராக செயல்பட்ட அவர் மான்செஸ்டரில் நடந்த கடைசி போட்டியின் அடுத்த நாள் காலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தமது உடல் ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்த அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதுடன் ஜோஸ் பட்லர் போன்ற இதர வீரர்களின் இடத்தை கெடுக்கும் வகையில் உணர்வதால் பணிச் சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தார்.

இருப்பினும் வழக்கம்போல டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 100% அர்ப்பணிப்புடன் விளையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தாலும் நேர்மையாக சுயநலமற்ற வகையில் அணியின் நலனுக்காக எடுத்துள்ள இந்த முடிவை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

இந்தியாவும் – ஷமியும்:
முன்னதாக ஏற்கனவே கடந்த வருடம் பணிச்சுமை காரணமாக சில மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுத்த பென் ஸ்டோக்ஸ் அதன்பின் திரும்பி 3 வகையான அணியிலும் விளையாடி வந்தார். இருப்பினும் மீண்டும் தொடர்ச்சியாக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடியதால் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விடலாம் என ஏற்கனவே முடிவெடுத்திருந்ததாக தெரிகிறது. அந்த நிலைமையில் லண்டன் ஓவலில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு 6/2 என்ற மோசமான நிலையில் களமிறங்கியபோது முஹம்மது ஷமியிடம் கோல்டன் டக் அவுட்டான தருணமே அந்த முடிவை இறுதியாக எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இது பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது சொந்த ஊரான துர்ஹாம் நகரில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “முதல் ஒருநாள் போட்டி (இந்தியாவுக்கு எதிரான) என்னை அதிகமாக தாக்கியது. அந்த போட்டி முடிந்ததும் ஜோஸ் பட்லரிடம் நான் பேசினேன். 5 நிமிடங்கள் வரை பேசிய என்னிடம் அடுத்ததாக நிறைய போட்டிகள் வர இருப்பதால் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்”

- Advertisement -

“அவர் அவ்வாறு கூறியது உண்மையானதாக தோன்றியது. அந்த உரையாடலை முடித்துக் கொண்டு 5 நிமிடங்கள் வெளியே சென்ற நான் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் எனக்கு நானே உபயோகம் இல்லாதவனாக உணர்ந்தேன். சுமாராக செயல்படும் என்னை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கேப்டன் முயற்சிப்பது ஒரு இனிமையான உணர்வு அல்ல. சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் அதை செய்ய முடியாது. மேலும் இங்கிலாந்துக்காக விளையாடும்போது சந்தேகத்துடன் விளையாடக்கூடாது. ஏனெனில் அது 100% தகுதியான மற்றொருவரின் பங்களிப்பை தடுப்பது போன்றதாகும்” என்று கூறினார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் 2 – 3 ஓவர்கள் வீசினால் மட்டும் போதுமானது என்பதால் அந்த கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கும் பென் ஸ்டோக்ஸ் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தனை வருடங்கள் விளையாடுவதை பார்த்து உத்வேகமடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எல்லாம் சரி, உடம்பை இன்னும் கொஞ்சம் கொறச்சா இன்னும் சூப்பரா விளையாடுவீங்க – இந்திய வீரருக்கு அக்தர் அட்வைஸ்

எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 100% அர்ப்பணிப்புடன் 140 – 150 போட்டிகளில் விளையாட முயற்சிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement