பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் போராடி வென்றது. அதற்கு முன்பாக இரண்டாவது தர நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் பாகிஸ்தான் போராடி சமன் செய்தது. அதனால் பாபர் அசாமின் கேப்டன்ஷிப் மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏனெனில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விகளுக்காக பொறுப்பேற்ற அவர் அனைத்து கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சாகின் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது.
டாலர் நோட்டுகளால்:
அதனால் உடனடியாக அவரை கழற்றி விட்ட பாகிஸ்தான் வாரியம் 2024 உலகக் கோப்பைக்கு பாபர் அசாமை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இருப்பினும் அவருடைய தலைமையில் மீண்டும் அதே பழைய செயல்பாடுகளை பாகிஸ்தான் அணி வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அந்தத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள் தனி பேருந்தில் முதல் போட்டி நடைபெறும் லீட்ஸ் மைதானத்திற்கு சென்றனர். அந்த பயணத்தின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் அசாம் கான் டாலர் பண நோட்டுகளை வைத்து தன்னுடைய முகத்தில் உள்ள வியர்வையை துடைக்கும் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்து பாபர் அசாம் உள்ளிட்ட இதர பாகிஸ்தான் வீரர்கள் சிரிக்கும் சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அதாவது தற்போது கோடை காலம் என்பதால் பாகிஸ்தானில் வெப்ப அலை வீசி வருகிறது. அதன் காரணமாக பாகிஸ்தானில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் வெயில் காலத்தை எப்படி பாகிஸ்தான் மக்கள் சமாளிக்கிறார்கள் என்பதை அசாம் கான் ரூபாய் நோட்டுக்களால் தன்னுடைய முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து கலாய்க்கும் வகையில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இவரை இந்தியாவின் பயிற்சியாளரா போடுங்க.. சிரிப்பை பற்றி கம்பீர் சொன்ன நெருப்பான பதில்.. ரசிகர்கள் வியப்பு
அதை பார்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் “நாங்கள் இங்கே வெயிலால் அவதிப்பட்டு வருகிறோம் நீங்கள் குளிர்சாதனை வசதிகொண்ட பேருந்தில் பயணித்துக் கொண்டு ரூபாய் நோட்டுக்களால் வியர்வையை துடைத்து எங்களை இழிவு படுத்துகிறீர்களா?” என்று பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விளாசி வருகின்றனர். அத்துடன் ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலையில் இது போன்ற வீடியோ தேவை தானா? என்று அந்நாட்டு ரசிகர்களே தங்களுடைய சொந்த வீரர்களை விளாசி வருவது குறிப்பிடத்தக்கது.