உடம்பை குறைக்கும் வரை ஒன்னும் நடக்காது, ரோஹித் சர்மாவின் தடுமாறுவதன் காரணத்தை அம்பலமாக்கும் சல்மான் பட்

Rohit Sharma Salman Butt
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக கேப்டனாக முன்னின்று அதிரடி காட்ட வேண்டிய ரோகித் சர்மா பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டதுடன் கேப்டனாகவும் இங்கிலாந்துக்கு எதிரான செமி பைனலில் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு பரிதாபமாகவே செயல்பட்டார்.

Rohit Injury

- Advertisement -

முன்னதாக ஒரு காலத்தில் ரசிகர்களால் ஹிட்மேன் என கொண்டாடப்படும் அளவுக்கு எதிரணிகளை பந்தாடி பெரிய அளவிலான ஸ்கோர்களை குவித்த ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமாக செயல்பட்டதால் கடந்த வருடம் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது 3 வகையான இந்திய அணிக்கும் தலைமை தாங்கும் பொறுப்பேற்றார். அப்போது முதலே கேப்டன்ஷிப் அழுத்தத்தால் மறைமுகமாக தடுமாறத் துவங்கிய அவர் பேட்டிங்கில் பார்மை இழந்து ரன்களை குவிக்க திணறி வருகிறார்.

உடம்பை குறைங்க:

இருப்பினும் கேப்டனாக கடந்த ஒரு வருடத்தில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்று இந்தியாவை தரவரிசையில் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்திய அவரது கேப்டன்ஷிப் பாராட்டுகளை பெற்றது. ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்த வருடம் நடைபெற்ற 2 முக்கிய பெரிய அழுத்தமான தொடர்களில் அவரது கேப்டன்ஷிப் செல்லுபடியாகாததால் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் பெரும்பாலான சமயங்களில் இதர வீரர்கள் தவறு செய்யும் போது கேப்டனாக ஆதரவு கொடுக்காமல் கோபமடையும் ரோஹித் சர்மா அவர்களை களத்திலேயே திட்டுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Rohit Sharma IND

அப்படி கேப்டன்ஷிப் அழுத்தத்தில் பெரிய தொடர்களில் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியாமல் திணறும் அவருக்கு பதிலாக குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டில் ஹர்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமிக்குமாறு கோரிக்கைகள் குவிந்துள்ளன. இந்நிலையில் ஜாம்பவானுக்கு நிகராக போற்றும் அளவுக்கு ஏற்கனவே சாதனைகளை படைத்துள்ள ரோகித் சர்மா சமீப காலங்களில் பேட்டிங்கில் தடுமாறுவதற்கு அவருடைய சுமாரான ஃபிட்னஸ் தான் காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் உடைத்து பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் சர்மா ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். இந்த டி20 உலகக் கோப்பையில் அவருக்கு சற்று எதுவும் சரியாக அமையவில்லை அவ்வளவு தான். ஆனால் அவர் ஃபிட்டாக இருப்பதாக தெரியவில்லை. அதனால் அவர் களத்தில் மெதுவாகவும் மந்தமாகவும் காணப்படுகிறார். இருப்பினும் அவர் ஒரு சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்த உடல் தகுதியுடன் அவரால் சாதிக்க முடியாது என்று அர்த்தமல்ல. ஏனெனில் சமீப காலங்களில் இதே சுமாரான உடல் தகுதியுடன் சில அற்புதமான இன்னிங்ஸ்களை அவர் விளையாடியுள்ளார். ஆனாலும் என்னை பொறுத்த வரை ஃபிட்டாக இருக்கும் ரோகித் சர்மா இந்தியாவுக்கு இன்னும் நிறைய பயனை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார்” என்று கூறினார்.

Butt

அவர் கூறுவது போல ரோகித் சர்மா திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் ஃபிட்னஸ் விஷயத்தில சமீப காலங்களாகவே ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு சுமாராகவே காட்சியளிக்கிறார். அதிலும் கேப்டனாக இதர வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டிய அவர் ஃபிட்னஸ் அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமையை மட்டும் நம்புவதால் நிறைய தருணங்களில் களத்தில் வேகமாக ஓடுவது போன்ற செயல்பாடுகளில் மந்தமாக செயல்படுவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

எனவே தமக்குள் பொதிந்து கிடக்கும் திறமை மீண்டும் வெளிப்படுவதற்கு இன்னும் கொஞ்சம் பிட்னஸ் விஷயத்தில் கவனம் செலுத்தி தன்னைத்தானே அவர் பட்டை தீட்டும் பட்சத்தில் பழைய ஹிட்மேனாக எதிரணிகளை பந்தாடி விமர்சனங்களையும் அடித்து நொறுக்குவார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement