இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணியானது 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தியது.
சுனில் நரேன் சாதனையை தகர்த்த பின் ஆலன் :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 226 ரன்களை குவிக்க அடுத்ததாக 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொல்கத்தா அணி 161 ரன்களுக்கு சுருண்டதால் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய பின் ஆலன் ஐபிஎல் போட்டிகளில் சுனில் நரேனின் சாதனையை கே.கே.ஆர் அணி சார்பாக முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய பின் ஆலன் 7 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதிலும் குறிப்பாக போட்டியின் முதல் ஓவரிலேயே அவர் 24 ரன்களை விளாசியிருந்தார். இதன் மூலம் கே.கே.ஆர் அணியின் மற்றொரு வீரரான சுனில் நரேனின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது சுனில் நரேன் துவக்க வீரராக விளையாடிய போது முதல் ஓவரில் 21 ரன்களை அடித்ததே கே.கே.ஆர் அணியின் வீரர் முதல் ஓவரில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
இதையும் படிங்க : தகாத வார்த்தையை பிரயோகித்த அபிஷேக் சர்மா.. தண்டனை வழங்கிய பி.சி.சி.ஐ – விவரம் இதோ
அந்த சாதனையை தற்போது பின் ஆலன் தனது 24 ரன்களுடன் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 26 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



