
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இந்தியா 18.5 ஓவரில் இலக்கைத் தொட்டு பாகிஸ்தானை இத்தொடரில் 2வது முறையாக தோற்கடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
அந்த தோல்வியால் பாகிஸ்தான் ஃபைனலுக்கு தகுதி பெற வங்கதேசம், இலங்கையை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அரை சதத்தை அடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் துப்பாக்கியால் சுடுவது போல் கொண்டாடினர். அதற்கு இந்தியாவை சேர்ந்த ரசிகர்கள் அவருக்கு விதவிதமாக தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் தம்முடையக் கொண்டாட்டத்தைப் பற்றி சமூகவலைதளங்களில் இந்திய ரசிகர்கள் சொல்லும் விஷயங்களுக்காக கவலைப்படவில்லை என்று ஃபர்கான் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 2 சூப்பர் 4 போட்டிகளில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற்று இந்தியாவை மீண்டும் எதிர்கொள்வோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நான் அடித்த சிக்ஸர்களை நீங்கள் வருங்காலங்களில் நிறைய பார்ப்பீர்கள். அந்தக் கொண்டாட்டம் எதர்ச்சியாக வந்தது. பெரும்பாலும் அரை சதமடிக்கும் போது நான் கொண்டாடுவதில்லை. ஆனால் இன்று எனக்கு திடீரென அப்படி கொண்டாடுவோம் என்று நினைவுக்கு வந்ததால் அதை செய்தேன். மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. இந்தியா மட்டுமின்றி எந்த அணிக்கு எதிராக விளையாடும் போது நீங்கள் ஆக்ரோசமாக விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: அபிஷேக் இந்த சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சு.. அப்ரிடியை நெட் பவுலர் மாதிரி வெளுத்துட்டாரு.. மிஸ்பா பாராட்டு
“என்னுடைய கருத்துப்படி இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய விதத்தால் எங்கள் வீரர்கள் ஃபைனல் செல்வதற்கான தன்னம்பிக்கையுடன் உள்ளனர். துபாய் பிட்ச்சில் பந்து பேட்டுக்கு நன்றாக வருகிறது. இனிமேல் வரும் போட்டிகளை நாங்கள் வாழ்வா – சாவா என்ற முறையிலேயே அணுகுவோம். அதனால் நாங்கள் வெற்றி பெறுவதற்கான திண்ணத்துடன் இருக்கிறோம்” என்று கூறினார்.