தவறான முடிவால் வெற்றி போச்சு! ஆஸி வீரரால் ரசிகர்கள் ஏமாற்றம் – என்ன நடந்தது? (ரொம்ப பாவம் அவரு)

Mitchell Marsh Out Umpire
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் ஒரு மாதத்தை கடந்து மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 45-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் டெல்லியை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 195/3 ரன்கள் குவித்தது.

LSG vs DC

- Advertisement -

அந்த அதிகபட்சமாக நட்சத்திர தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (51) ரன்கள் குவிக்க தீபக் ஹூடா தனது பங்கிற்கு 6 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (34) ரன்கள் எடுத்தார். டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

டெல்லி போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 196 என்ற பெரிய இலக்கை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 5 (7) டேவிட் வார்னர் 3 (4) ஆகிய தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 13/2 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் 2-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்க முயற்சித்தனர். அதில் மிச்செல் மார்ஸ் 37 (20) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த லலித் யாதவ் 3 (4) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

Axar Patel

இருப்பினும் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (30) ரன்கள் எடுத்து போராடிய ரிஷப் பண்ட்டும் ஒரு கட்டத்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரோவ்மன் போவல் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்டு 35 (21) ரன்கள் எடுத்தாலும் முக்கிய நேரத்தில் அவுட்டானார். இறுதியில் அக்சர் பட்டேல் கடைசி நேரத்தில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 42* (24) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினாலும் அவருக்கு கைகொடுக்க இதர பேட்ஸ்மென்கள் இல்லாததால் 20 ஓவர்களில் 189/7 ரன்களை மட்டுமே எடுத்த டெல்லி போராடி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

தவறவிட்ட மார்ஷ்:
இந்த தோல்வியால் பங்கேற்ற 9 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த டெல்லி புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக இப்போட்டியில் டேவிட் வார்னர் போன்ற தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் 13/2 என ஆரம்பத்திலேயே டெல்லி திணறியது. அப்போது களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக 3 பவுண்டரி 3 சிக்சருடன் வெறும் 20 பந்துகளில் 37 ரன்களை 185.00 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் சரிந்த டெல்லியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அந்த நிலையில் கிருஷ்ணப்பா கெளதம் வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்ற மிட்சேல் மார்ஷ் பேட்டில் பந்து பட்டவாறு சென்று விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் கையில் தஞ்சமடைந்தது. ஆனால் அந்த தருணத்தில் அந்தப் பந்தை வீசிய கிருஷ்ணப்பா கௌதம் கூட அது அவரின் பேட்டில் படவில்லை என்று நினைத்ததால் உறுதியாக அம்பயரிடம் அவுட் கேட்கவில்லை.

- Advertisement -

ஆனால் குயின்டன் டி காக் உட்பட ஒருசில லக்னோ வீரர்கள் மட்டும் அவுட் கேட்க உடனடியாக அம்பயரும் அவுட் கொடுத்து விட்டார். அந்த சமயத்தில் அதை எதிர்த்து டிஆர்எஸ் செய்யாமல் மிட்சல் மார்ஷ் பெவிலியன் திரும்பிய பின் டிவி ரிப்ளையில் பார்க்கும்போது பந்து ஒருதுளி அளவுகூட பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது.

ரசிகர்கள் ஏமாற்றம்:
அந்த த்ருணமே டெல்லியின் தோல்வி உறுதியானது என்று கூறலாம். ஏனெனில் அப்போட்டியில் ரிஷப் பண்ட் உட்பட இதர பேட்ஸ்மேன்களை விட மிட்சேல் மார்ஷ் மட்டும் தான் எந்தவித தடுமாற்றமுமின்றி அதேசமயம் அதிரடியாகவும் லக்னோ பவுலர்களை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். வெறும் 6 ரன்கள் வித்யாச தோல்வி என்ற நிலைமையில் ஒருவேளை அந்த டிஆர்எஸ் எடுத்து இருந்து மேலும் ஒருசில ரன்களை அவர் அடித்திருந்தால் நிச்சயம் டெல்லி வெற்றி பெற்றிருக்கும்.

இதையும் படிங்க : ஜடேஜாவின் பிளஸ்ஸே அதுதான். ஆனா அதுவே போயிடுச்சி – கேப்டன்ஷிப் விலகல் குறித்து தோனி கூறியது என்ன?

ஆனால் கவனக்குறைவால் கடுமையாக உழைத்தும் வெற்றியை எதிரணிக்கு பரிசளித்து விட்டீர்களே என்று மிட்செல் மார்ஷ் மீது ரசிகர்கள் அலுத்துக் கொள்கின்றனர். இருப்பினும் அந்த சமயத்தில் பேட்டில் பட்டதாக உணர்ந்த அவர் ரெவியூ எடுக்காததற்காக அவரையும் குறை கூற முடியாது.

Advertisement