IND vs BAN : இதுவே கடைசியா இருக்கட்டும், இனியும் அவரை டீம்ல பார்க்க விரும்பல – சீனியர் வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி

Shardul-Thakur
- Advertisement -

2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் தலைகுனிவையும் விமர்சனங்களையும் சந்தித்த இந்திய அணி டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாவுக்கு பதில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியது. இருப்பினும் சட்டகிரோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடி சரவெடியாக செயல்பட்டு 50 ஓவர்களில் 409/8 ரன்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

அதிகபட்சமாக 2வது விக்கெட்டுக்கு 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய இசான் கிசான் இரட்டை சதமடித்து 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சருடன் 210 (131) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தனது பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு சதமடித்து 11 பவுண்டரி 2 சிக்சருடன் 113 (91) ரன்களும் குவித்தனர். அதை தொடர்ந்து 410 என்ற மெகா இலக்கை துரத்திய வங்கதேசம் இம்முறை ஆரம்ப முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34 ஓவரிலேயே 182 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

பார்க்க விரும்பல:
அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை எடுத்தார். அதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை சுவைத்து தொடரை இழந்தாலும் வைட் வாஷ் தோல்வியை தவிர்த்து மீசையை முறுக்கியது. அந்த வகையில் இப்போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தடுத்த சாதனைகளை படைத்ததால் மகிழ்ச்சியடைந்த இந்திய ரசிகர்கள் மெய்மறந்து போனாலும் சீனியர் வீரர் சிகர் தவான் செய்த சொதப்பலால் ஏமாற்றமடைந்தனர்.

ஏனெனில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஏற்கனவே தோல்விக்கு காரணமாகும் வகையில் செயல்பட்ட அவர் பேட்டிங்க்கு சாதகமாக அமைந்த சட்டகிரோம் மைதானத்திலும் தடவலாக செயல்பட்டு 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் 37, அக்சர் பட்டேல் 20 என இளம் வீரர்கள் கூட கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தனர். முன்னதாக 2013இல் தோனி அறிமுகப்படுத்திய ஓப்பனிங் ஜோடியில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக அவதரித்த சிகர் தவான் சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல முக்கிய காரணமாக அமைந்து 2015, 2016, 2017, 2019 ஆகிய உலக கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இருப்பினும் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய அவரது இடத்தில் வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் அவரை விட சற்று சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனதாக்கி விட்டார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்த சிகர் தவான் ஐபிஎல் தொடரில் பெரிய ரன்களை எடுத்தாலும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிக்க தடுமாறியதால் ஜிம்பாப்வே போன்ற 2வது தர அணிகளுக்கு எதிரான தொடர்களில் கேப்டனாக வாய்ப்பளித்து கழற்றி விடப்பட்டு வருகிறார்.

இருப்பினும் சமீப காலங்களில் ராகுல் சுமாராக செயல்படுவதால் 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தவான் களமிறங்கலாம் என்ற கருத்துக்கள் பரவலாக காணப்பட்டது. ஆனால் கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரில் சொதப்பும் அவர் ஒரு கட்டத்தில் மிஸ்டர் ஐசிசி என்ற பெயரெடுத்தாலும் தற்போது 36 வயதை கடந்த காரணத்தால் பழைய பன்னீர்செல்வமாக செயல்பட முடியாமல் தவிக்கிறார்.

இதையும் படிங்க: சச்சின் – கங்குலி ஆகியோரது 24 வருட பார்ட்னர்ஷிப் சாதனையை தூளாக்கிய இஷான் கிசான் – விராட் கோலி ஜோடி, 2 புதிய சாதனை

அதனால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் இவரை பார்ப்பது இதுவே கடைசி தொடராக இருக்க வேண்டும் என்றும் இவருக்கு பதில் இளம் வயதில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனைகளை படைத்த இசான் கிசான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

Advertisement