
அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது. பகல் இரவாக நடைபெறும் அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்த உதவியுடன் 337 ரன்கள் குவித்து அசத்தியது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிராஜ் மற்றும் பும்ரா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதன் பின் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 128-5 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் மிரட்டலாக விளையாடிய இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா மிகவும் சுமாராக விளையாடுகிறது என்று சொல்லலாம். அதற்கு ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 140 ரன்கள் குவித்த ஹெட் சதத்தை தொடுவதற்கு முன்பாகவே எட்ஜ் கொடுத்தார். ஆனால் அதை முதல் ஸ்லிப் பகுதியில் பிடிப்பதற்கு ஃபீல்டரை நிறுத்தாத ரோகித் சர்மா இரண்டாவது ஸ்லிப் பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தார். சொல்லப்போனால் 2023 உலகக் கோப்பை ஃபைனலிலும் ஹெட் சதத்தை அடிப்பதற்கு முன்பாகவே ரோஹித் சர்மா இதே தவறை செய்தது தோல்வியை கொடுத்தது.
இது ஒரு புறமிருக்க போட்டியில் அணியின் நலனுக்காக ரோஹித் மிடில் ஆர்டரில் களமிறங்கியும் 20 ரன்கள் கூட தாண்டவில்லை. கடைசியாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் உட்பட விளையாடிய 11 இன்னிங்ஸில் 6, 3, 11, 18, 8, 0, 52, 2, 8, 23, 5, 6 ரன்களை வெறும் 10.00 என்ற படுமோசமான சராசரியில் எடுத்துள்ளார். மேலும் இந்த வருடம் மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் 27.13 என்ற சுமாரான சராசரியை கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 2023 மாதிரியே.. 11 இன்னிங்ஸ்.. பேசாம ரிட்டயராகுங்க பும்ரா கேப்டனா வரட்டும்.. ரோஹித் மீது ரசிகர்கள் விமர்சனம்
இதை சமூக வலைதளங்களில் பதிவிடும் இந்திய ரசிகர்கள் 38 வயதாகும் ரோகித் சர்மா இளம் தலைமுறைக்கு வழி விட்டு ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டதாக அதிருப்தியுடன் விமர்சிக்கிறார்கள். அதே போல வெளிநாடுகளில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் சிறப்பாக இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் பும்ரா இந்திய அணியை வழி நடத்த வேண்டும் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.