சான்ஸ் போதும் ! நட்சத்திர மும்பை வீரரால் அதிருப்தி, இளம் வீரருக்கு வாய்ப்பு கோரும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை நகரில் கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2022 தொடர் கடந்த ஒரு மாதங்களாக பல எதிர்பாராத த்ரில்லர் போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற வரலாற்றுச் சாதனை படைத்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பைக்கு மட்டும் இந்த தொடர் இதுவரை வெற்றிகரமாக அமையவில்லை. சொல்லப்போனால் இந்த வருடம் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்த்த அந்த அணி ரசிகர்களுக்கு முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியை பரிசளித்த மும்பை இந்தியன்ஸ் வரலாற்றிலேயே முதல் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனை படைத்தது.

MI Jaspirt Bumrah

- Advertisement -

அதன்பின் ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த அடுத்த 2 போட்டிகளில் ஒரு வழியாக வெற்றியை பதிவு செய்த அந்த அணி நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த 11-வது போட்டியில் மீண்டும் 52 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் 165/9 ரன்கள் எடுத்தது.

மும்பை பரிதாபங்கள்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 43 (24) நிதிஷ் ராணா 43 (26) ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்ததால் ஒரு கட்டத்தில் 180 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுத்த நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா பெரிய ரன்களை எடுக்க விடாமல் போட்டியை மும்பையின் பக்கம் திருப்பினார்.

ROhit Sharma MI vs KKR

அதனால் 166 என்ற சுலபமான இலக்கை துரத்திய மும்பை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அந்த அணி 17.3 ஓவரில் 113 ரன்களுக்கு சுருண்டு படுமோசமான தோல்வியை பரிசளித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவு செய்த மும்பை மீண்டும் ஒரு பரிதாபமான சாதனை படைத்தது.

- Advertisement -

அந்த அணிக்கு இஷான் கிசான் எடுத்த 51 ரன்களை (43) தவிர ரோஹித் சர்மா 2 (6) திலக் வர்மா 6 (5) டிம் டேவிட் 13 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் யாருமே 20 ரன்களை கூட தாண்டாததால் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் 83/4 என தடுமாறிய அந்த அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் 15 (16) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். கடந்த பல வருடங்களாக இதுபோன்ற தோல்வி நிச்சயம் என்று கருதப்பட்ட பல போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டாசாக பேட்டிங் செய்த பொல்லார்ட் மும்பையின் ஃபினிஷராக அறியப்படுகிறார்.

Pollard Krunal Pandya

பொல்லார்ட் சொதப்பல்:
கடந்த 2010 முதல் மும்பைக்கு ஒருசில கிடைக்காத வெற்றிகளைக் கூட தனது அசுர பேட்டிங்கால் எதிரணியிடமிருந்து பறித்து மும்பைக்கு பரிசளித்ததால் அவரை 6 கோடி என்ற நல்ல தொகைக்கு அந்த அணி நிர்வாகம் தக்க வைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை அவர் களமிறங்கிய 11 போட்டிகளில் வெறும் 144 ரன்களை 14.40 என்ற மோசமான சராசரியில் 107.46 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்து வருவது மும்பையின் தொடர் தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாகிறது.

- Advertisement -

இந்நிலையில் எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் வேறு வழியின்றி அவரை பெஞ்சில் அமர வைக்குமாறு பல ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அத்துடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் பறிபோய்விட்ட நிலையில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மோசமான தருணத்தில் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமெனில் அவருக்கு ஓய்வு வழங்குமாறு ரசிகர்கள் கேட்கின்றனர்.

கடைசி இடம்:
அப்படி செய்தால் அவரும் கொஞ்சம் புத்துணர்ச்சி அடைவார் எனக்கூறும் ரசிகர்கள் அவருக்கு பதில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஓரளவு அசத்தலாக செயல்பட்ட இளம் தென்ஆப்பிரிக்க வீரர் தேவால்ட் ப்ரேவிஸ்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோருகிறார்கள். இருப்பினும் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பது போல் காலம் காலமாக பல கிடைக்காத வெற்றிகளைக் கூட பெற்றுக்கொடுத்த “பொல்லார்ட்டுக்கு இந்த வருடம் எதுவும் சரியாக அமையவில்லை” என்பதால் அவருக்கு ஓய்வளித்து அடுத்த வருடம் வழக்கம்போல வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் பல ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : நோ பால் நாயகர்கள் ! ஐபிஎல் வரலாற்றில் அதிக நோ பால்களை வீசிய டாப் 5 பவுலர்கள் இதோ

ஏனெனில் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் ஒருமுறை கூட புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது கிடையாது. அந்த சூழ்நிலையில் தற்போது 10-வது இடத்தில் இருக்கும் அந்த அணி எஞ்சிய 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே குறைந்தது 9-வது இடத்தையாவது பிடித்து மேலும் ஒரு அவமானத்தை தவிர்க்க முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

Advertisement