டெத் ஓவர்களில் திண்டாடும் தீபக் சஹர், குட்டி புவனேஷ்வர் என கலாய்க்கும் ரசிகர்கள் – மோசமான புள்ளிவிவரம் இதோ

Deepak-Chahar
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்தியா முதல் கிரிக்கெட் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் அவமான தோல்வியை சந்தித்தது. டிசம்பர் 4ஆம் தேதியன்று டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேசத்தின் தரமான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அசத்திய கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் ஆரம்ப முதலே இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என தடுமாறி தோல்வியின் பிடியில் சிக்கியது. அதனால் வெற்றி உறுதியென்று இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்த போது கடைசி நேரத்தில் நங்கூரமாக நின்ற மெஹதி ஹசன் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்தி 38* (39) ரன்கள் விளாசி யாருமே எதிர்பாராத வகையில் த்ரில் வெற்றி பெற வைத்தார். அதனால் 1 – 0 * (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள வங்கதேசம் கத்துக்குட்டியாக இருந்தாலும் சொந்த மண்ணில் நாங்கள் எப்போதுமே புலி என்பதை நிரூபித்துள்ளது.

- Advertisement -

குட்டி புவனேஷ்வர்:
மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா பந்து வீச்சில் போராடி 9 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை கையில் வைத்திருந்தாலும் கடைசி 6 ஓவரில் மோசமாக பந்து வீசி பள்ளி குழந்தைகளைப் போல் ஃபீல்டிங் செய்து வெற்றியை நழுவ விட்டது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஹசன் – ரஹ்மான் ஆகிய டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு இந்தியாவின் டெத் பவுலிங் மோசமாக இருந்தது. அதிலும் குறிப்பாக 43 ஓவரில் 158/9 என்ற நிலையில் வங்கதேசம் இருந்த போது பந்து வீசிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதல் பந்திலேயே நோ பால் போட்டு 14 ரன்களை வாரி வழங்கினார்.

சரி அதிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்வார் என்று பார்த்தால் 46வது ஓவரில் மீண்டும் தவறாமல் நோ பால் போட்ட அவர் 8 ரன்களை கொடுத்து கையிலிருந்த வெற்றியை வங்கதேசம் தட்டிப்பறிக்க முக்கிய காரணமாக செயல்பட்டார். மித வேகப்பந்து வீச்சாளரான அவர் பொதுவாகவே பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பதால் “பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட்” என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். மேலும் இது வரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 16 விக்கெட்களை 5.82 என்ற சூப்பரான எக்கனாமியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

இப்படி ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது சிறப்பாக காட்சியளிக்கும் அவருடைய உண்மையான வண்டவாளம் பிரித்துப் பார்க்கும் போது தான் தெரிகிறது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய போட்டிகளில் பவர் பிளே எனப்படும் முதல் 10 ஓவர்களில் 8 விக்கெட்களை 4.87 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்துள்ள தீபக் சஹர் டெத் ஓவர்கள் எனப்படும் 40 – 50 ஓவர்களில் தனது கேரியரில் இதுவரை ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 8.90 என்ற படுமோசமான எக்கனாமியில் பந்து வீசியுள்ளார்.

அதிலும் குறிப்பாக வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணியின் 10வது பேட்டிங் ஜோடி புரட்டி எடுக்கும் அளவுக்கு அவர் டெத் ஓவர்களில் படுமோசமாக செயல்படுவதை வழக்கமாக வைத்துள்ளார். முன்னதாக மற்றொரு ஸ்விங் பவுலராக அறியப்படும் புவனேஸ்வர் குமார் தான் சமீப காலங்களில் இதே போல் பவர் பிளே ஓவர்களில் அசத்தினாலும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால் அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகிறார். அந்த வரிசையில் குட்டி புவனேஸ்வர் குமார் போல செயல்படும் இவரும் இதே போல் விளையாடும் பட்சத்தில் நிச்சயமாக 2023 உலகக் கோப்பை வாய்ப்பை நழுவ விடுவதுடன் விரைவில் இந்திய அணியிலிருந்து காணாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும் என்றே கூறலாம்.

Advertisement