IPL 2023 : சிரிப்பதா அழுவதா? அந்த சாதனைய தூக்கி குப்பைல போடுங்க – வெற்றியை தாரை வார்த்த வீரரை விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 41வது லீக் போட்டியில் சென்னையை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 200/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 92* (52) ரன்களும் ருதுராஜ் கைக்வாட் 37 (31) ரன்களும் எடுத்தனர். அதைத் துரத்திய பஞ்சாப்புக்கு சிகர் தவான் 28 (18) ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 42 (24) ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

அடுத்து வந்த அதர்வா டைட் 13 (17) ரன்களில் அவுட்டானாலும் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 40 (24) ரன்களும் சாம் கரண் 29 (21) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். குறிப்பாக 15 ஓவர்கள் வரை போட்டி சென்னையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதிலும் 16வது ஓவரில் துசார் டேஷ்பாண்டே 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உட்பட 24 ரன்களை வாரி வழங்கி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அந்த நிலையில் களமிறங்கி தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மாவை 19வது ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி கொடுத்தாலும் 4வது பந்தில் 21 (10) ரன்களில் துஷார் தேஷ்பாண்டே அவுட்டாக்கினார்.

- Advertisement -

குப்பைல போடுங்க:
ஆனால் அடுத்து வந்த சிக்கந்தர் ராசா மீண்டும் அதே ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக பவுண்டரி அடித்ததார். அதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது பதிரனா எவ்வளோ முயற்சித்தும் கடைசி பந்தில் பவுண்டரி கொடுக்கவில்லை என்றாலும் சிக்கந்தர் ராசா 3 ரன்கள் எடுத்து மொத்தமாக 13* பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் ஆரம்பக்கட்ட அதிரடியால் கண்டிப்பாக 210 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை ரவீந்திர ஜடேஜாவின் 12 (10) ரன்கள் தடுமாற்ற ஆட்டத்தால் எக்ஸ்ட்ரா ரன்களை எடுக்க தவறியது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதை விட பந்து வீச்சில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த துஷார் தேஷ்பாண்டே டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி மொத்தமாக 4 ஓவரில் 49 ரன்கள் கொடுத்தது சென்னையின் தோல்விக்கு வெளிப்படை காரணமாக அமைந்தது. தீபக் சஹர் காயமடைந்ததால் இந்த சீசனில் ஆரம்பகட்ட போட்டிகளில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அவர் அதற்கு நேர்மாறாக எதிரணியின் வெற்றிகளில் பங்காற்றும் வகையில் இதே போல மோசமாக செயல்பட்டு சென்னையின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அதனால் எதிரணிக்கு இம்பேக்ட் வீரராக செயல்படுவதாக ரசிகர்கள் கலாய்த்த போதிலும் பொதுவாகவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தோனி இவருக்கும் தொடர்ந்து நம்பி வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதில் பவர் பிளே ஓவர்களில் ஓரளவு தாக்கு பிடிக்கும் அவர் டெத் ஓவர்களில் கொஞ்சம் கூட முன்னேறாமல் ரன்களை வாரி வழங்கி தொடர்ந்து சென்னையின் தோல்விகளுக்கு பந்து வீச்சு துறையில் முக்கிய காரணமாக அமைந்து வருகிறார்.

இருப்பினும் தோனியின் ஆதரவால் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 17 விக்கெட்களை எடுத்துள்ள அவர் அதிக விக்கெட்கள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கு வழங்கப்படும் ஊதா தொப்பியை இந்த போட்டியின் முடிவில் பரிசாக பெற்றார். ஆனால் அந்த பட்டியலில் இருக்கும் அரஷ்தீப் போன்ற எஞ்சிய பவுலர்கள் 9க்கும் குறைவான எக்கனாமியை மட்டுமே கொண்டுள்ள நிலையில் துஷார் தேஷ்பாண்டே மட்டும் 11.07 என்ற அதிகபடியான எக்கனாமியுடன் உண்மையாகவே அந்த ஊதா தொப்பிக்கு தகுதியற்றவராக முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க:MI vs RR : ஹாட்ரிக் சிக்ஸர்கள், 1000வது போட்டியில் வான்கடேவில் வரலாறு படைத்த மும்பை – ரோஹித்துக்கு பிறந்தநாள் பரிசு

அதனால் சிரிப்பதா அழுவதா என தெரியாத சென்னை ரசிகர்கள் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தானே சாதனை ஊதா தொப்பி வழங்க வேண்டும் இவருக்கு ஏன் வழங்கினீர்கள் என்று கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் இந்த சீசனில் இதுவரை சென்னை பதிவு செய்துள்ள 4 தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்த உங்களுக்கு ஊதா தொப்பி ஒன்று தான் குறைவா என்று துஷார் தேஷ்பாண்டேவை விளாசும் அந்த அணி ரசிகர்கள் பேசாமல் அதை குப்பையில் தூக்கி வீசுமாறு சமூக வலைதளங்களில் உச்சகட்ட கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement