IPL 2023 : ஓவர் கான்ஃபிடென்ட்ஸ் எதுக்கு? – 5 வாரத்துக்கு முன்பே மும்பையின் வெற்றியை முடித்த ஆஸி வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

TIM David Cameroon Green
- Advertisement -

எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் தங்களது முதல் 13 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 89* (47) ரன்கள் குவித்த அதிரடியில் லக்னோ நிர்ணயித்த 178 ரன்களை துரத்திய மும்பைக்கு இஷான் 59 (39) ரோகித் சர்மா 37 (25) என தொடக்க வீரர்கள் அதிரடியான ரன்களை குவித்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதனால் இந்த சீசனில் ஏற்கனவே தொடர்ந்து 3 போட்டிகளில் 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக வரலாறு படைத்த மும்பையின் கடப்பாரை பேட்டிங் நிச்சயமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஓவர்களில் சூரியகுமார் யாதவ் 7, நேஹல் வதேரா 16, விஷ்ணு வினோத் 2 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய லக்னோ வெற்றிக்கு போராடியது. இருப்பினும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக 32* (19) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசியில் ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

ஓவர் கான்ஃபிடென்ட்:
அப்போது டிம் டேவிட், கேமரூன் கிரீன் என 2 காட்டடி பேட்ஸ்மேன்கள் இருந்ததால் மும்பை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் அட்டகாசமாக செயல்பட்ட இளம் வீரர் மோசின் கான் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து மும்பையின் வெற்றியை பறித்தார். முன்னதாக மும்பையின் ஃபினிஷராக காலம் காலமாக செயல்பட்டு வந்த பொல்லார்ட் கடந்த வருடம் ஓய்வு பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் ஒரு சில போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

அந்த நிலையில் இந்த சீசனில் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆன்றிச் நோர்ட்ஜே கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது இதே டிம் டேவிட் 13* (11) ரன்களும் கேமரூன் க்ரீன் 17* (8) ரன்களும் எடுத்து ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் மும்பையின் புதிய ஃபினிஷராக அந்த அணி ரசிகர்கள் கொண்டாடிய அவர்கள் அந்த போட்டியின் முடிவில் “6 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்படும் போது அதை எடுக்கக்கூடிய நாங்கள் தான் உங்களுடைய பேட்ஸ்மேன்கள்” என்ற தலைப்புடன் தோள் மீது கை போட்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெத்தாக பதிவிட்டனர்.

- Advertisement -

ஆனால் அன்று சொன்னது போலவே 5 வாரங்கள் கழித்து இந்த போட்டியில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது மிகச் சரியாக 6 பந்துகளில் டிம் டேவிட் – ஆகியோர் ஜோடியாக வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கையிலிருந்த மும்பையின் வெற்றியை முடித்தனர். அதனால் அவருடைய அந்த பழைய இன்ஸ்டாகிராம் பதிவை தோண்டி எடுத்த ரசிகர்கள் அதீத தன்னம்பிக்கையுடன் எதிரணியினரை குறைத்து மதிப்பிட்டால் இது தான் நடக்கும் என்று கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க:PBKS vs DC : பஞ்சாப்பை பந்தாடிய டெல்லி – சிஎஸ்கே’வை எச்சரிக்கும் வகையில் காலம் கடந்து ஃபார்முக்கு திரும்பிய இளம் வீரர்

இதை தொடர்ந்து மே 21ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தங்களது சொந்த ஊரில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் எப்படியாவது வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராட உள்ளது. மறுபுறம் 90% பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ள லக்னோ மே 20ஆம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்று குவாலிஃபயர் ஒன்று போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement