IND vs WI : வண்டி அஹமதாபாத்தில் மட்டுமே ஓடும், மீண்டும் ஏமாற்றி வெளிநாட்டில் திணறும் இளம் வீரர் – ஆதாரத்துடன் கலாய்க்கும் ரசிகர்கள்

Shubman Gill Ishan Kishan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கி கோப்பை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த 2 இருதரப்பு டி20 போட்டிகளில் இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் இன்னும் விழுந்துவிடவில்லை என்பதை நிரூபித்தது.

இத்தொடரில் அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மாவை தவிர்த்து சூரியகுமார் யாதவ், இஷான் கிசான், சஞ்சு சாம்சன், கேப்டன் பாண்டியா போன்ற பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது இந்தியாவுக்கு தோல்விகளை கொடுத்துள்ளது. குறிப்பாக 2 போட்டிகளிலுமே பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் முதல் போட்டியில் வெறும் 150 ரன்கள் சேசிங் செய்ய முடியாமல் தோற்ற இந்தியா 2வது போட்டியிலாவது பொறுப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

- Advertisement -

அகமதாபாத் வண்டி:
இத்தனைக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கும் இந்த வீரர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் தொடக்க வீரர் சுப்மன் கில் 3 (9) 7 (9) என 2 போட்டிகளிலுமே அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமாகி மறக்க முடியாத 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு குஜராத் கோப்பையை வெல்ல உதவினார்.

அதனால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட கிடைத்த வாய்ப்புகளில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து அசத்திய அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளதாக பாராட்டுகளும் குவிந்தன. இருப்பினும் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவு அசத்திய அவர் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் திண்டாடி வந்தார்.

- Advertisement -

அதற்கு கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக குஜராத்தின் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த அவர் தம்மால் டி20 கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தார். அதன் காரணமாக விராட் கோலி போல இவரும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களும் நம்ப துவங்கினர். ஆனால் உண்மையாகவே இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அகமதாபாத் மைதானத்தில் களமிறங்கிய 1 போட்டியில் 126 (63) ரன்களை எடுத்துள்ளார்.

அகமதாபாத் மைதானத்திற்கு வெளியே விளையாடிய 7 எஞ்சிய போட்டிகளில் அவர் முறையே 7 (5), 5 (3), 46 (36), 7 (6), 11 (9), 3 (9), 7 (9) என வெறும் 86 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதிலிருந்து மிகவும் ஃபிளாட்டான பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சை கொண்ட அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே வண்டி ஓடும் என்பது போல் அவர் செயல்படுவதாக ரசிகர்கள் அதிருப்தியுடன் கலாய்க்கிறார்கள். மேலும் இத்தொடரில் அவரை விட (10) அர்ஷ்தீப் சிங் (18) அதிக ரன்கள் எடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் கலாய்கின்றனர்.

- Advertisement -

அது போக ஐபிஎல் 2023 தொடரிலும் அகமதாபாத் மைதானத்தில் அடுத்தடுத்த 2 சதங்களை அடித்து மிரட்டிய அவர் இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைந்தார். அத்துடன் பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில் முறையே 6 (11), 10 (12), 29 (37), 7 (16), 34 (49), 85 (92), 3 (9), 7 (9) என ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்ட அவர் எஞ்சிய 7 போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:அவரை டீம்ல எடுத்தது இப்படி சும்மா நிக்க வைக்க தானா? பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சித்த – ஆகாஷ் சோப்ரா

இதிலிருந்தே உச்சகட்டமான ஃபார்மில் இருந்தும் அகமதாபாத் போன்ற இந்திய மைதானங்களை தவிர்த்து வெளிநாடுகளில் பெரும்பாலான போட்டிகளில் சுப்மன் கில் சுமாராக செயல்படுவது தெளிவாக தெரிவதாக ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே தயவு செய்து இவரை இப்போதே சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியவருடன் ஒப்பிட வேண்டாம் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement