இலங்கை பவுலரை பார்த்து தெறித்து ஓடும் நட்சத்திர இந்திய வீரர் – ரசிகர்களிடம் கலாய் வாங்கிய பரிதாபம்

Karthik-2
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் முதல் வாரத்தை கடந்து ரசிகர்களுக்கு த்ரில்லர் விருந்து வருகிறது. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுமூச்சுடன் போராடி வருகின்றன. அதிலும் முதலாவதாக நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப் பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.

இந்த தொடரில் மார்ச் 5-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/3 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

ராஜஸ்தான் தோல்வி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆரம்பம் முதல் நங்கூரமாக விளையாடிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் அதிரடியாக 70* ரன்கள் விளாசினார். அவருடன் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சிம்ரோன் ஹெட்மையர் 31 பந்துகளில் 42* ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் டு பிளேஸிஸ் 29 (20) ரன்களும் அனுஜ் ராவத் 26 (25) ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

ஆனால் அடுத்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி 5 ரன்களில் அவுட்டாக அவருடன் களமிறங்கிய டேவிட் வில்லி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். போதாகுறைக்கு அடுத்து வந்த அதிரடி வீரர் ரூதர்ஃபோர்டு 5 ரன்களில் நடையை கட்ட 87/5 என தடுமாறிய பெங்களூருவின் வெற்றி திடீரென கேள்விக்குறியானது. இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய இளம் வீரர் சபாஷ் அகமது 26 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 45 ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடியாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 44* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அபார பினிஷிங் செய்ததால் 19.1 ஓவரில் 173/6 ரன்களை எடுத்த பெங்களூரு திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தெறித்து ஓடம் சஞ்சு சாம்சன்:
இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ள பெங்களூரு புதிய கேப்டன் டு பிளேஸிஸ் தலைமையில் வெற்றி நடை போடுகிறது. மறுபுறம் இந்த வருடம் பங்கேற்ற முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற ராஜஸ்தான் இந்த வருடத்தின் முதல் தோல்வியை பதிவு செய்தது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து களமிறங்கிய தேவதூத் படிக்கள் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து 37 (29) ரன்கள் எடுத்து 2-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானை மீட்டெடுத்தார்.

- Advertisement -

அந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அப்போது பந்துவீச வந்த இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா ஓவரின் 2-வது பந்தில் மெகா சிக்சர் அடித்தார். ஆனால் 4-வது அப்படியே பெட்டி பாம்பாக ஹசரங்கா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 8 (8) ரன்களில் நடையைக்கட்டினார். ஹஸரங்காவிடம் அவர் இப்படி அவுட்டாவது முதல் முறை அல்ல.

ஏனெனில் இந்த போட்டியுடன் சேர்த்து அவருக்கு எதிராக இதுவரை 5 டி20 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதில் 15 பந்துகளை மட்டுமே சந்தித்து வெறும் 8 ரன்களை 2.00 என்ற தரை மோசமான சராசரியில் எடுப்பதற்குள் 4 முறை ஆட்டமிழந்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஷிகர் தவான் தலைமையில் விளையாடிய இந்திய அணியில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன் இதேபோல ஹஸரங்கா ஊதிய மகுடிக்கு பெட்டிப் பாம்பாக அவுட்டானர். இதன் வாயிலாக திறமை மிகுந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் சஞ்சு சாம்சனை அதிகமுறை டி20 போட்டிகளில் அவர் செய்த வெளிநாட்டு பவுலர் என்ற பெருமையை ஹஸரங்கா பெற்றார்.

இதை பார்த்தே பல ரசிகர்கள் தற்போது ஹஸரங்காவின் பாக்கெட்டில் சஞ்சு சாம்சன் பத்திரமாக இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் விதவிதமாக கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் இந்த வருடத்தின் முதல் 2 போட்டிகளில் அவர் 55 (27), 30 (21) அதிரடியாக ரன்களை குவித்ததால் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ராஜஸ்தான் நேற்றைய போட்டியில் அவர் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் முதல் முறையாக பரிதாப தோல்வியடைந்தது.

Advertisement