வண்டி ஒரு சீசனில் மட்டும்தான் ஓடும்! சொதப்பும் இளம் நட்சத்திர சிஎஸ்கே வீரரை விளாசும் ரசிகர்கள்

Ruturaj Gaikwad
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 9-ஆம் தேதியன்று 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் நடப்பு செம்பியன் சென்னையை தோற்கடித்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 154/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா 15 ரன்களில் அவுட்டாக மற்றொரு இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் 16 (13) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார்.

இதனால் 36/2 என தடுமாறிய சென்னையை அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் மொய்ன் அலி ஆகியோர் இணைந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்தனர். இதில் ராயுடு 27 (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருடன் சற்று அதிரடியாக விளையாடிய மொய்ன் அலி 48 (35) ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய சிவம் துபே 3 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 110/5 எனத் தடுமாறிய சென்னையின் திண்டாட்டம் மீண்டும் தொடர்ந்தது.

- Advertisement -

திண்டாடும் சென்னை:
அந்த நிலையில் களமிறங்கிய நட்சத்திர வீரர் எம்எஸ் தோனியும் 3 (6) ரன்களில் நடையை கட்டியதால் அதிலிருந்து கடைசிவரை மீளமுடியாத சென்னைக்கு அதன் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக அடித்து 23 (15) ரன்கள் எடுத்த போதிலும் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை. மறுபுறம் ஐதராபாத் சார்பில் பட்டையை கிளப்பும் வகையில் பந்து வீசிய தமிழக வீரர்கள் வாசிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 155 என்ற எளிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே சென்னையின் தோல்வியை உறுதி செய்தனர்.

- Advertisement -

இந்த ஜோடியில் வில்லியம்சன் 32 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் அசத்திய அபிஷேக் சர்மா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 75 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி ஆதிரடியாக 39* (15) ரன்கள் எடுக்க 17.4 ஓவர்களில் 155/2 ரன்களை எடுத்த ஹைதராபாத் இந்த வருடத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியால் 10-வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்த அந்த அணி 8-வது இடத்துக்கு முன்னேறியது.

மறுபுறம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா தலைமையில் ஏற்கனவே முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த சென்னை இந்தப் போட்டியில் மீண்டெழும் என அந்த அணி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறியையும் காட்டாத சென்னை மீண்டும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் படுமோசமாக செயல்பட்டு 4-வது தோல்வியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 4 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை இப்படி 4 தொடர் தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் அடிப்பகுதியில் திண்டாடுவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

- Advertisement -

முன்னதாக அந்த அணி பெரிதும் நம்பியிருக்கும் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் மீண்டும் இந்த போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஏனெனில் இந்த வருடம் அவர் பங்கேற்ற முதல் 3 போட்டிகளில் முறையே 0 (4), 1 (4), 1 (4) என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமான தொடக்கத்தைக் கொடுத்தார். இருப்பினும் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளிலும் இதே போல் முதல் 3 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்த அவர் அதன்பின் அபாரமாக செயல்படத் துவங்கி அதிரடியாக ரன்களை குவித்தார். அந்த வகையில் இந்த வருடம் முதல் 3 போட்டிகளில் அதிலும் 4-வது பந்தில் தொடர்ச்சியாக அவுட்டாகி வந்த அவர் இன்றைய போட்டியில் கண்டிப்பாக பார்முக்கு திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

அதிலும் இப்போட்டியில் அவர் சந்தித்த 4-வது பந்தில் அவுட்டாகி விடுவாரோ என அச்சமடைந்த சென்னை ரசிகர்களுக்கு பவுண்டரி அடித்து நம்பிக்கை கொடுத்த அவர் அதன்பின் அதிரடியாக மேலும் 2 பவுண்டரிகளை எடுத்து பார்முக்கு திரும்பி விட்டேன் என்பது போல் காட்டினார். ஆனால் அந்த நேரம் பார்த்து தமிழக வீரர் நடராஜன் வீசிய அற்புதமான யார்க்கர் பந்தில் கிளீன் போல்டான அவர் 16 (13) ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதை பார்த்த பல ரசிகர்கள் தற்போது அவர் மீது கோபமடைந்து “இந்த வண்டி ஒரு சீசனில் மட்டும்தான் ஓடும்போல” என்பதுபோல் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 1000 வலா ! விராட் கோலி, ரோஹித் சர்மாவால் முடியாத மாஸ் டி20 சாதனையை படைத்த நட்சத்திர இந்திய வீரர்

ஏனெனில் கடந்த வருடம் இதே போல் முதல் 3 போட்டிகளில் சொதப்பினாலும் 4-வது போட்டியிலிருந்து விஸ்வரூபம் எடுத்த அவர் அதன்பின் மொத்தம் 635 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். ஆனால் இம்முறை 3 போட்டிகளை தாண்டியும் அவர் சொதப்புவதால் இந்த சீசனில் பெரிய அளவில் ரன்கள் அடிக்க மாட்டார் போல தெரிகிறது என பல ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Advertisement