1000 வலா ! விராட் கோலி, ரோஹித் சர்மாவால் முடியாத மாஸ் டி20 சாதனையை படைத்த நட்சத்திர இந்திய வீரர்

- Advertisement -

மும்பை நகரில் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்று ஏப்ரல் 8-ஆம் தேதி நடந்த 16-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. பிராபார்ன் மைதானத்தில் கடைசி பந்து வரை அனல் தெறித்த அந்த போட்டியில் பஞ்சாப்பை பதம் பார்த்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189/9 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரசித் கான் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்:
அதை தொடர்ந்து 190 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் ஆரம்பம் முதலே நங்கூரமாக பேட்டிங் செய்து பஞ்சாப் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். அவருக்கு உறுதுணையாக முதல் முறையாக வாய்ப்பு பெற்ற தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் 35 (30) ரன்கள் எடுத்தார். மறுபுறம் பட்டையை கிளப்பிய கில் 59 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 96 ரன்கள் எடுத்திருந்த போது சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு 19-வது ஓவரில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் அவருடன் விளையாடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவும் 27 (18) கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்ததால் திடீரென போட்டியில் மிகபெரிய பரபரப்பு நிலவியது.

அந்த நிலைமையில் களமிறங்கிய இந்திய இளம் வீரர் ராகுல் திவாடியா கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு பஞ்சாபுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து குஜராத்தை தனி ஒருவனாக வெற்றிபெற வைத்தார். மறுபுறம் கையிலிருந்த நல்ல வெற்றியை கடைசி ஓவரில் மோசமாக பந்து வீசியதால் பஞ்சாப் கோட்டை விட்டது அந்த அணி ரசிகளிடயே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Rahul tewatia Odean Smith

1000 வாலா ஷிகர் தவான்:
முன்னதாக இந்தப் போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைந்தாலும் நட்சத்திர இந்திய அனுபவ வீரர் ஷிகர் தவான் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 30 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் வந்த வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி 200 ரன்களை தொட முடியாமல் போனது.

- Advertisement -

அதிலும் இந்த போட்டியில் 4 பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1000 பவுண்டரிகள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனை படைத்தார். அத்துடன் உலக அளவில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1000 பவுண்டரிகள் அடித்த 4-வது பேட்ஸ்மேன் என்ற சூப்பரான சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.

Shikhar Dhawan

கோலி, ரோஹித்தால் கூட முடியல:
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத் போன்ற அணிகளுக்காக விளையாடி வந்த அவர் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அத்துடன் இந்தியாவுக்கும் கடந்த 2013க்கு பின் தொடர்ந்து விளையாடி வந்த அவர் கடந்த வருடம் வரை ஓப்பனிங் வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கி பட்டைய கிளப்பும் பவுண்டரிகளை பறக்கவிட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வந்தார்.

அந்த வகையில் இந்தியாவிற்காக 1759 ரன்களை குவித்த அவர் 191 பவுண்டரிகளை அடித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 5911 ரன்களை அடித்து அதிக ரன்கள் குவித்த 2-வது பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் 668 பவுண்டரிகளை பறக்க விட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிக பவுண்டரிகளை அடித்து பேட்ஸ்மேன் என்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளார். இப்படி இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் 800க்கும் மேற்பட்ட பவுண்டரிகளை அடித்துள்ள உள்ளூர் கிரிக்கெட்டில் 200 க்கு மேற்பட்ட பவுண்டரிகள் என மொத்தம் 1001* பவுண்டரிகளை அடித்து டி20 கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை (ஃபோர்ஸ்) அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் உலக அளவில் 4-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Shikhar Dhawan 2

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களை குவித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ள விராட் கோலி மற்றும் ரசிகர்களால் ஹிட்மேன் என கொண்டாடப்படும் ரோகித் சர்மா ஆகியோர் கூட 1000 பவுண்டரிகளை இதுவரை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவானுக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் 917 பவுண்டரிகளுடன் விராட் கோலி 2-வது இடத்திலும் 875 பவுண்டரிகளுடன் ரோகித் சர்மா 3-வது இடத்திலும் 779 பவுண்டரிகளுடன் சுரேஷ் ரெய்னா 4-வது இடத்திலும் உள்ளனர். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:
1. கிறிஸ் கெயில் : 1132 பவுண்டரிகள்
2. அலெஸ் ஹெல்ஸ் : 1054 பவுண்டரிகள்
3. டேவிட் வார்னர் : 1004 பவுண்டரிகள்
4. ஷிகர் தவான் : 1001* பவுண்டரிகள்.

Advertisement