IPL 2023 : மலிங்காவை அடிச்ச எனக்கு வாய்ப்பில்லையா? ரியன் பராக் ஆவேசம் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள், நடந்தது என்ன

Riyan Parag
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. முன்னாதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரியன் பராக் கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகி ஒரு போட்டியில் இளம் வயதில் அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து வெற்றி பெற வைத்து நடனமாடினார்.

அப்போது இவரிடம் ஏதோ திறமை இருப்பதாக மயங்கிய ராஜஸ்தான் நிர்வாகம் இப்போது வரை 3.80 கோடி என்ற ரிங்கு சிங், ரகானே போன்ற வீரர்களை காட்டிலும் பெரிய தொகைக்கு தொடர்ந்து தக்க வைத்து வாய்ப்பு கொடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த 5 இன்னிங்ஸ்களில் இதுவரை 42 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து 576 ரன்களை 16.46 என்ற சராசரியிலும் 123.61 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்து பள்ளி வயது சிறுவனை போன்ற புள்ளிவிவரத்துடன் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
ஆனால் அப்படி மோசமாக செயல்பட்டும் என்னவோ பெரியவற்றை சாதித்தது போல் விராட் கோலி போல் ட்விட்டரில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் சமீப காலங்களாகவே ராஜஸ்தான் அணி தோல்வியடையும் வகையில் செயல்பட்டு வந்தார். அதனால் வாயில் பேசுவதற்கு நிகராக செயலில் செய்து காட்டுங்கள் என்று தொடர்ந்து அவரை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். அதன் உச்சகட்டமாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் வெறும் 155 ரன்களை துரத்தும் போது சாம்சன் 2, ஹெட்மயர் 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அற்புதமான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் அதில் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் முதல் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் கடைசியில் 15* (12) ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் ஏராளமான ரசிகர்களும் ரவி சாஸ்திரி போன்ற சில முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்த காரணத்தால் அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற துருவ் ஜுரேல் சென்னைக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி சரவெடியாக 3 பவுண்டரி 2 சக்சருடன் 34 (15) ரன்கள் குவித்து இறுதியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதனால் நீண்ட காலமாக ரசிகர்கள் கலாய்த்தது போல ரியான் பராக் அதிரடியாக நீக்கப்பட்டது ராஜஸ்தான் அணிக்கு கை மேல் பலன் கொடுத்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இலங்கை ஜாம்பவான் லசீத் மலிங்காவை வலைப்பயிற்சியில் எதிர்கொண்டு சிக்சர் அடித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரியான் பராக் இவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்தும் தமக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது போல் விமர்சனங்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் டாப் பவுலர்களை எதிர்கொண்டு வித்யாசமான ஷாட்களை அடித்த தருணங்களையும் படம் பிடித்து மொத்தமாக ஒன்றல்ல இரண்டல்ல 4 சிறிய வீடியோக்களை தமது திறமையை காட்டும் வகையில் “செல்வது கடினமாகும் போது கடினமானது செல்கிறது. கண் சிமிட்டுகிறது” என்ற தலைப்புடன் அவர் பதிவு செய்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் இந்த ஆட்டமெல்லாம் வலை பயிற்சியில் மட்டும் தான் அடிப்பீர்கள் ஆனால் முதன்மையான போட்டிகளில் எதிரணி பவுலர்களிடம் அடி வாங்குவீர்கள் என்று கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க: IPL 2023 : லக்னோ அணிக்கு பாரமாக இருப்பதே ராகுல் தான் – ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் புள்ளிவிவரம் இதோ

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 4 சிக்ஸர்களை அடிப்பேன் என்று வாயில் மட்டும் பேசியதை செயலில் காட்டாமல் இப்படி வலைப்பயிற்சியில் கட்டுவது எந்த பயனையும் கொடுக்காது என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். அத்துடன் இந்த வீடியோவில் 40 வயது மலிங்காவையும் ஃபுல் டாஸாக வந்த பந்துகளையும் தானே அடித்தீர்கள் அதிலும் ஒன்று எளிதாக தேர்ட் மேன் திசையில் கேட்ச் பிடித்திருக்கலாம் என்று வெளிப்படையாக கலாய்த்துள்ள ஒரு ரசிகர் அப்படி என்ன ஸ்பெஷலாக செய்து விட்டீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement