இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இழந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள பாகிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிள்ளது. டிசம்பர் 26ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 438 ரன்கள் குவித்து அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் சதமடித்து 161, சர்ப்ராஸ் அகமது 86, ஆஹா சல்மான் 103 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 183 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டேவோன் கான்வே 92 ரன்களில் அவுட்டானாலும் டாம் லாதம் சதமடித்து 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த ஜோடிக்கு பின் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் நங்கூரமாக நின்று பேட்டிங் செய்த நிலையில் எதிர்ப்புறம் வந்த ஹென்றி நிக்கோலஸ் 22, டார்ல் மிட்சேல் 42, டாம் ப்ளண்டல் 47 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் பேட்டரி:
அந்தளவுக்கு பாகிஸ்தான் பவுலிங் சுமாராக இருந்ததை பயன்படுத்திய டெயில் எண்டர் இஷ் சோதி 7வது விக்கெட்டுக்கு 159 பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பங்கிற்கு 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் சில கேட்ச்களை தவற விட்ட பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கேன் வில்லியம்சன் 21 பவுண்டரி 1 சிக்சருடன் இரட்டை சதமடித்து 200* ரன்கள் குவித்த போது 612/9 ரன்கள் குவித்த நியூசிலாந்து தங்களது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஸ்பின்னர் அப்ரார் அகமது 205 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து 170 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சபிக் 17, ஷான் மசூட் 10 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 4வது நாள் முடிவில் 77/2 என்ற நிலையுடன் விளையாடி வருகிறது. இன்னும் 1 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் 97 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90% இல்லை என்பதுடன் டிரா செய்வதற்கும் போராட வேண்டியுள்ளது. இதற்கு அந்த அணியின் மோசமான பந்து வீச்சே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே பாகிஸ்தான் என்றால் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சை கொண்ட அணி என்று அனைவரும் போற்றுவார்கள். ஆனால் இந்த வருடம் சொந்த மண்ணில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 600+ ரன்களை வாரி வழங்கிய அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் 500+ ரன்களை அள்ளி வழங்கியது. அதை விட 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை, வங்கதேசம் போன்ற உலகின் அனைத்து அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்தது ஒரு 5 விக்கெட் ஹால் எடுத்துள்ள நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 1 விக்கெட் ஹால் கூட எடுக்கவில்லை.
அது போக இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங் சராசரி கொண்ட அணிகளில் பாகிஸ்தான் 9வது இடத்தில் திண்டாடுகிறது. அந்த பட்டியல்:
1. தென் ஆப்பிரிக்கா : 24.78
2. இந்தியா : 25.76
3. ஆஸ்திரேலியா : 27.25
4. இங்கிலாந்து : 29.83
5. நியூசிலாந்து : 33.05
6. இலங்கை : 33.22
7. வெஸ்ட் இண்டீஸ் : 35.55
8. வங்கதேசம் : 38.96
9. பாகிஸ்தான் : 44.09*
அதுவும் போக கடைசி 3 டெஸ்டில் 77.4 ஓவரில் வெறும் 1 மட்டுமே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளனர். ஆனால் பொதுவாகவே பாகிஸ்தான் என்றால் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் தொழிற்சாலை என்றும் ஃபேஸ் பேட்டரி என்றும் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மார் தட்டுவது வழக்கமாகும். அந்த நிலையில் இவ்விரு சாதனகளை பார்க்கும் ரசிகர்கள் பாகிஸ்தானின் பவுலிங் பேட்டரிக்கு என்னாச்சு என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு எனது அப்பா அனுப்பிய செய்தி இதுதான் – சூரியகுமார் நெகிழ்ச்சி
அதற்கு சாகின் அப்ரிடி போன்ற முதன்மை பவுலர்கள் இல்லாததே காரணம் என்று சொல்லி பாகிஸ்தான் ரசிகர்கள் நழுவுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியா தொடரிலும் பாதி இங்கிலாந்து தொடரிலும் விளையாடியனர். மேலும் பொதுவாக சொந்த மண்ணில் புதிய பவுலர்களும் புலியாக செயல்படுவார்கள் என்ற நிலையில் தரமான புதிய ஃபாஸ்ட் பவுலர்களை பாகிஸ்தான் உருவாக்கவில்லை என்பதும் இதிலிருந்து தெரிகிறது.



