இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இம்முறை சிறப்பாக செயல்பட்டு 438 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் சதமடித்து 161 ரன்களும் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற அனுபவ வீரர் சர்ப்ராஸ் அகமது 86 ரன்களும் எடுத்தனர்.
அவர்களுடன் ஆகா சல்மான் தனது பங்கிற்கு சதமடித்து 103 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்களை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்துக்கு ஆரம்ப முதலே பாகிஸ்தான் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு 183 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த டேவோன் கான்வே சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தானின் கோமாளித்தனம்:
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் டாம் லாதம் சதமடித்து 113 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் ஹென்றி நிக்கோலஸ் 22, டார்ல் மிட்சேல் 42, டாம் ப்ளண்டல் 47 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை விட 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 772 நாட்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பார்முக்கு திரும்பினார்.
அவரது சிறப்பான ஆட்டத்தால் 4வது நாள் உணவு இடைவெளியில் 519/6 குவித்துள்ள நியூசிலாந்து பாகிஸ்தானை விட 83 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுமாராக செயல்பட்ட விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அதிரடியாக நீக்கப்பட்டு மூத்த வீரர் சர்ப்ராஸ் அகமது சேர்க்கப்பட்டார். அந்த நிலையில் 3வது நாளின் காலை வேளையில் தமது உடல்நிலை சீராக இல்லை என்பதால் கேப்டன் பாபர் அசாம் பெலியனுக்கு திரும்பி தேவையான முதலுதவிகளை எடுத்துக்கொண்டார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமது போட்டியை பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்துடன் அவர் உடைமாற்றும் அறைக்கு சென்றார்.
அதே சமயம் அவருக்கு பதிலாக முகமது ரிஸ்வான் சப்ஸிடியூட் பீல்டராக களத்தில் செயல்பட்டார். அந்த சமயம் பார்த்து நவ்மன் அலி வீசிய ஓவரில் டேவோன் கான்வே பந்தை தவற விட்டதால் பாகிஸ்தான் அணியினர் எல்பிடபிள்யூ முறையில் நடுவரிடம் அவுட் கேட்டனர். ஆனால் நடுவர் அலீம் தார் அவுட் கொடுக்காததால் தற்காலிக கேப்டனாக கருதப்பட்ட சர்ப்ராஸ் அகமது டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டார். அப்போது வடிவேலு காமெடி போல “நானும் கேப்டன் தான்” என்று உரிமை எடுத்துக் கொண்ட முகமது ரிஸ்வானும் ரிவ்யூ கேட்டார்.
ஆனால் சப்ஸிடியூட் பீல்டராக விளையாடுபவர்கள் ஃபீல்டிங் மட்டுமே செய்ய வேண்டும். பேட்டிங், பவுலிங் அல்லது கேப்டன்ஷிப் செய்யகூடாது என்பது அடிப்படை விதிமுறையாகும். இருப்பினும் இருந்த பரபரப்பில் அவற்றை மறந்த நடுவர் அதை ஏற்றுக் கொண்டு ரிவியூ எடுத்ததில் பாகிஸ்தானுக்கு விக்கெட் கிடைத்தது. ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் ஒரு அணிக்கு எத்தனை கேப்டன்கள் என்று பாகிஸ்தானை கலாய்க்கிறார்கள். ஏனெனில் சப்ஸிடியூட் பீல்டராக வந்த முகமது ரிஸ்வான் அத்தோடு நிற்காமல் நிறைய தருணங்களில் பீல்டிங் செட் செய்வது போன்ற கேப்டனுக்குரிய வேலைகளையும் செய்தார்.
இதையும் படிங்க: வீடியோ : அப்பா தான் மெசேஜ் பண்ணாரு, இது கனவா நிஜமான்னு சந்தேகமா இருக்கு – சூர்யகுமார் மகிழ்ச்சியாக பேசியது என்ன
அந்த வகையில் கேப்டன் பாபர் அசாம் வெளியேறிய போது யார் தற்காலிக கேப்டன் என்பதை பாகிஸ்தான் அணி நிர்வாகம் தீர்மானிக்க தவறியது. அத்துடன் சப்ஸிடியூட் பீல்டராக வந்த தாம் பந்தை பிடித்து போடுவதை தவிர்த்து வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது தெரியாமல் முகமது ரிஸ்வான் கேப்டனாக செயல்பட்டார். அதனால் அணி நிர்வாகம் முதல் விளையாடும் வீரர்கள் வரை ரூல்ஸ் தெரியாமல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒரே அணி பாகிஸ்தான் தான் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.



