WPL 2023 : எவ்ளோ காசு கொடுத்தீங்க? ஃபைனலில் ஜாலம் நிகழ்த்திய அம்பயர் – மும்பையை கலாய்க்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

WPL No Ball
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மகளிர் ஐபிஎல் தொடரை வரலாற்றில் முதல் முறையாக பெரிய அளவில் இந்த வருடம் பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கிய 5 அணிகளில் டெல்லி மற்றும் மும்பை ஃபைனலுக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து மார்ச் 26 ஆம் தேதியன்று ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் கடுமையாக போராடி 131/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் மெக் லென்னிங் 35 ரன்களும் சீக்கா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தாலா 27* ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஹெய்லே மேத்தியூஸ் மற்றும் இஸி ஓங் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 132 ரன்களை துரத்திய மும்பைக்கு நட் ஸ்கீவர் 60* (55) கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 37 (39) எமிலியா கெர் 14* (8) என முக்கிய வீராங்கனைகள் தேவையான ரன்களை எடுத்தனர். அதனால் 19.3 ஓவரில் 134/3 ரன்கள் எடுத்த மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

அம்பயரின் ஜாலம்:
மறுபுறம் இந்த தொடரில் மும்பையை விட லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிய டெல்லி பேட்டிங்கில் சற்று குறைவான ரன்களை எடுத்ததால் பந்து வீச்சில் போராடியும் முதல் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அதற்கு அம்பயரின் தவறான தீர்ப்பு முக்கிய காரணமாக இருந்தது என்றே சொல்லலாம். ஆம் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு லேடி சேவாக் என்று இந்திய ரசிகர்கள் கொண்டாடும் இளம் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு அதிரடியாக 11 (4) ரன்களை விளாசி விரைவாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நிலையில் இஸி ஓங் வீசிய 2வது ஓவரின் 3வது பந்து இடுப்புக்கு மேலே வந்த நிலையில் அதை சிக்ஸர் அடிக்க முயற்சித்த அவர் கேட்ச் கொடுத்தார். இருப்பினும் அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்ததால் நிச்சயமாக நோ-பால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்பயர் அப்படியே நேர்மாறாக அது சரியான பந்து என்று அறிவித்தததால் ஷபாலி வர்மா ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்றார். ஆனால் அது நிச்சயமாக இடுப்புக்கு மேலே வந்த நிலையில் எப்படி நோ-பால் கிடையாது என்று எதிர்ப்புறம் இருந்த டெல்லியின் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லென்னிங் களத்தில் இருந்த நடுவருடன் நேரடியாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

ஆனால் 3வது நடுவர் அதை சரியான பந்து என்று அறிவித்ததால் தாம் எதுவும் செய்ய முடியாது என்று களத்தில் இருந்த நடுவர் கையை விரித்தது ரசிகர்களை கோபமடைய வைத்தது. ஏனெனில் முதல் பார்வையிலும் சரி ரிப்ளையிலும் சரி அந்த பந்து இடுப்புக்கு மேலே ஸ்டம்புகளுக்கு மேலே வந்தது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் கண்ணை மூடிக்கொண்டு அது சரியான பந்து என்று நடுவர் நோ-பால் கொடுக்க மறுத்தது டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தி இறுதியில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது.

ஏனெனில் சேவாக் போல அதிரடியாக விளையாடக்கூடிய ஷபாலி வர்மா இன்னும் 10 – 20 பந்துகள் நின்றிருந்தால் பெரிய ரன்களை குவித்திருப்பார் என்பதை அவரது பேட்டிங்கை பார்த்து வரும் இந்திய ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்படி ஃபைனலில் அப்பட்டமான ஜாலம் நிகழ்த்திய அம்பயருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று நிறைய ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் மும்பை நிர்வாகத்தை கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:வீடியோ : பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்த ஆப்கானிஸ்தான் – முதல் மோதலிலேயே சரித்திர வரலாற்று சாதனை

குறிப்பாக ஆடவர் ஐபிஎல் வரலாற்றில் பலமுறை மும்பைக்கு ஆதரவாக நடுவர்கள் நடந்து கொள்வதாக ஏற்கனவே ரசிகர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டுவது வழக்கமாகும். அந்த வரிசையில் இந்த ஃபைனலிலும் நடுவரை கரெக்ட் செய்த மும்பை ஆடவர் தொடரில் 5 கோப்பை வென்றது போல் மகளிர் தொடரின் முதல் கோப்பையை வென்றதில் தங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement