பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்த ஆப்கானிஸ்தான் – முதல் மோதலிலேயே சரித்திர வரலாற்று சாதனை

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பாதுகாப்பு பிரச்சனைகளால் பொதுவான இடமான ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் சடாப் கான் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தானை முதல் போட்டியில் 92 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

குறிப்பாக 4 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது. மறுபுறம் முக்கிய அணிகளுக்கு எதிராக முதல் தர அணியையும் கத்துக்குட்டிகளுக்கு எதிராக இளம் வீரர்களுடன் கூடிய 2வது தர அணியையும் களமிறக்கி வெற்றி கண்டு வரும் இந்தியாவின் ஸ்டைலை முதல் முறையாக பின்பற்றிய பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்து கிண்டல்களுக்கு உள்ளானது.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
அந்த நிலையில் இத்தொடரை வெல்ல மார்ச் 26ஆம் தேதியன்று சார்ஜாவில் நடைபெற்ற 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆப்கானிஸ்தானின் அற்புதமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி மீண்டும் 20 ஓவர்களில் கடுமையாக போராடி வெறும் 130/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு சாய்ம் ஆயுப் 0, அப்துல்லா ஷபிக் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பரூக்கி வீசிய முதல் ஓவரின் முதலிரண்டு பந்துகளில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் முகமது ஹாரிஸ் 15, தாஹிர் 13, அசாம் கான் 1 என மேலும் சில முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 63/5 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணியை நல்ல வேளையாக இமாத் வாசிம் 64* (57) ரன்களும் கேப்டன் சடாப் கான் 32 (25) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்ற ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதை தொடர்ந்து 131 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு உஸ்மான் காணி 7 (9) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றாலும் தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 44 (49) ரன்களும் இப்ராஹிம் ஜாட்ரன் 38 (40) ரன்களும் எடுத்து விக்கெட்களை சரிய விடாமல் பார்த்துக் கொண்டனர்.

- Advertisement -

அதை பயன்படுத்தி இறுதியில் நஜிபுல்லா ஜாட்ரான் அதிரடியாக 23* (12) ரன்களும் முகமது நபி 14* (9) ரன்களும் விளாசி கச்சிதமான பினிஷிங் கொடுத்ததால் 19.5 ஓவரில் 133/3 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டுமே மோதிய போது பாகிஸ்தானிடம் ஒரு சில போட்டிகளில் ஆப்கானிஸ்தான் போராடி தோற்றது. அந்த நிலையில் முதல் முறையாக இப்போது தான் இவ்விரு அணிகளும் ஒரு இருதரப்பு தொடரில் மோதின. அதில் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் என்ன செய்து விடப் போகிறது என்று என்னத்துடன் அனுபவமற்ற வீரர்களுடன் கூடிய அணியை பாகிஸ்தான் அனுப்பியது.

- Advertisement -

ஆனால் நாங்கள் இனிமேலும் கத்துக் குட்டிகள் அல்ல என்பது போல் இத்தொடரில் அபாரமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் முதல் மோதலிலேயே தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக கடந்த ஆசிய கோப்பையில் இதே சார்ஜா மைதானத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சண்டையில் ஈடுபட்ட பாகிஸ்தானை இம்முறை அதே மைதானத்தில் 2 போட்டிகளில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் பழி தீர்த்துள்ளது.

இதையும் படிங்க:உங்க சேவை எங்களுக்கு போதும். அதிரடியாக பி.சி.சி.ஐ கழட்டி விட்ட நட்சத்திர வீரர் – ரசிகர்கள் ஏமாற்றம்

மறுபுறம் ஆப்கானிஸ்தானிடம் சந்தித்த அவமான தோல்வியால் கடுமையான விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளான பாகிஸ்தான் இன்று இரவு நடைபெறும் கடைசி போட்டியில் குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் பரிதாப நிலையுடன் களமிறங்க உள்ளது.

Advertisement