எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்க? மும்பை – சென்னையை கலாய்க்கும் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா?

CskvsMi
- Advertisement -

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 6-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை எதிர்கொண்ட ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அதிரடியாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக இந்த வருடம் பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள கொல்கத்தா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

முன்னதாக புனே நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161/4 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 52 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

தடுமாறிய கொல்கத்தா:
அவருடன் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் திலக் வர்மா 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 38* ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் வெறும் 5 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்க விட்ட பொல்லார்ட் 22* ரன்கள் குவித்து மிரட்டலான பினிஷிங் செய்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 7 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 10 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அந்த நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் 17 (12), நிதிஷ் ராணா 8 (7) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரசல் 11 (5) ரன்களில் நடையை கட்டியதால் 101/5 என தடுமாறிய கொல்கத்தாவின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நிலைத்து நின்று பேட்டிங் செய்த தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

அடித்து துவைத்த கமின்ஸ்:
அந்த நிலையில் அவருடன் கைகோர்த்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் யாருமே எதிர்பாராத வண்ணம் விஸ்வரூபம் எடுத்து வெறும் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 56* ரன்களை விளாசி மும்பையை புரட்டி எடுத்தார். அதிலும் வெற்றிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சம்ஸ் வீசிய 16-வது ஓவரை எதிர்கொண்ட அவர் 6, 4, 6, 6, 3 (நோ பால்), 4, 6 என ஒரே ஓவரில் 35 ரன்களையும் விளாசிய கொல்கத்தாவை வெற்றி பெறச் செய்தார். மேலும் 14 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற கேஎல் ராகுல் சாதனையையும் சமன் செய்தார்.

அவருடன் வெங்கடேஷ் ஐயர் 50* (41) ரன்கள் எடுக்க 16 ஓவர்களிலேயே 162/5 ரன்களை எடுத்த கொல்கத்தா 4 ஓவர்கள் மீதம் வைத்து அதிரடி வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பியதுடன் பந்துவீச்சில் அதைவிட மோசமாக சொதப்பிய மும்பை இந்த வருடம் இதுவரை பங்கேற்ற முதல் 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த 3 தோல்விகளை பெற்று ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

கடைசி இடத்துக்கு போட்டிபோடும் மும்பை – சென்னை:
முன்னதாக 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதே போலவே தனது முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த பரிதாபத்திற்கு உள்ளானது. தற்போது அதேபோலவே 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் சென்னையை விட வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை அணி சென்னைக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

அதிலும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக திகழும் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் மட்டும் கடைசி இடத்தை பிடிக்க போட்டி போட்டு வருவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இதுவரை முதல் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் திணறும் இந்த அணிகளில் நேற்றைய போட்டி வரை புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் சென்னை இருந்தது. ஆனால் நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்த காரணத்தால் சென்னையை முன்னுக்கு தள்ளியுள்ள மும்பை அந்த அணியை விட மோசமான ரன்ரேட் பெற்று 9-வது இடத்தை வெற்றிகரமாக பிடித்துள்ளது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் தான் படைத்த சாதனை குறித்து பேசிய – ஆட்டநாயகன் பேட் கம்மின்ஸ் கூறியது என்ன?

அந்த வகையில் தற்போது கடைசி இடமான 10-வது இடத்தில் இந்த 2 அணிகளுக்கும் போட்டியாக ஹைதராபாத் இருக்க மும்பை 9-வது இடத்திலும், சென்னை 8-வது இடத்திலும் தத்தளிப்பது அந்த அந்த அணியின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

Advertisement