மீண்டும் படமெடுத்து ஆடிய வங்கதேச நாகின் டான்ஸ், 5 வருட பகையை பழிதீர்த்த இலங்க, கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

SL Vs BAN Nagin Dance
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 1ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இவ்விரு அணிகளும் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்ததால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா நிலைமையில் களமிறங்கின. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 183/7 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு ரஹ்மான் 5, ரஹீம் 4 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும் ஹசன் 38, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 24 என நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 87/4 என திணறிய அந்த அணி 150 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட போதும் மிடில் ஆர்டரில் மிரட்டிய அபிஃப் ஹொசைன் 39 (22) ரன்களும் மகமதுல்லா 27 (22) ரன்களும் எடுத்தனர். கடைசியில் மிரட்டிய ஹொசைன் 4 பவுண்டரியை பறக்கவிட்டு 24* (9) ரன்களை விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இலங்கை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் கருணரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

இலங்கை அசத்தல்:
அதை தொடர்ந்து 184 ரன்களை துரத்திய இலங்கைக்கு தொடக்க வீரர் நிசாங்கா 20 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அஷலங்கா 1, குணதிலகா 11, ராஜபக்சா 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் 4 – 5 முறை அவுட்டாவதிலிருந்து அதிர்ஷ்டத்துடன் தப்பிய மற்றொரு தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (37) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அந்த சமயத்தில் வந்த ஹசரங்கா 2 ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்து வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த கேப்டன் தசுன் சனாகா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 45 (33) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டபோது களமிறங்கிய கருணரத்னே அதிரடியாக 16 (10) ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய பெர்னாண்டோ 2 பவுண்டரியுடன் 10* (3) ரன்களை சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரில் 184/8 ரன்களை எடுத்த இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

பாம்பு நடனம்:
மறுபுறம் பேட்டிங்கில் ஆரம்பத்தில் சொதப்பி கடைசியில் அசத்திய வங்கதேசம் பந்துவீச்சில் ஆரம்பத்தில் அசத்தி கடைசி நேரத்தில் சொதப்பி வழக்கம் போல மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து இந்த ஆசிய கோப்பையிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. முன்னதாக கடந்த 2018இல் இலங்கையில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பை முத்தரப்பு டி20 தொடரில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற விடாமல் செய்தது. அப்போது வெற்றி பெற்ற கர்வத்தால் சினிமாவில் வரும் பிரபல பாம்பு நடனமான “நாகின் டான்ஸை” இலங்கை வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் முன்னிலையில் நடனமாடிய வங்கதேச வீரர்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்கள்.

அதன்பின் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை கிட்டத்தட்ட தோற்கடித்த வங்கதேசம் மீண்டும் பாம்பு நடனமாடியது. ஆனால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து காப்பாற்றிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் படமெடுத்து ஆடிய வங்கதேச பாம்பு கூட்டத்தை அடித்து நொறுக்கினார். அதனால் அந்த வெற்றியை இந்திய ரசிகர்களை விட இலங்கை ரசிகர்கள் கொண்டாடியதை மறந்திருக்க முடியாது.

- Advertisement -

பழிக்கு பழி:
இருப்பினும் அந்த பழைய கணக்கை நேருக்கு நேர் பழிதீர்க்காமல் மனதிலேயே வைத்திருந்த இலங்கை நேற்றைய போட்டிக்கு முன்பாக தங்களது அணியை நல்ல பவுலர்கள் இல்லாத சுமாரான அணி என வங்கதேசம் வம்பிழுத்ததால் கொதித்தெழுந்து மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி கண்டது. நேற்றைய போட்டியிலும் கூட சிறப்பாக செயல்பட்ட தருணங்களில் சில வங்கதேச வீரர்களும் மைதானத்தில் இருந்த நிறைய வங்கதேச ரசிகர்களும் நாகின் டான்ஸ் ஆடி கடுப்பேற்றினார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் பொறுமையாக இருந்து கடைசியில் வெற்றியை கண்டபோது பகையை வெளிப்படுத்திய இலங்கை வீரர் சமிக்கா கருணரத்னே அதே நாகின் நடனத்தை பெவிலினியனில் இருந்து ஆடி பழிக்கு பழி தீர்த்தார்.

இதையும் படிங்க : பார்மில் இல்லாத கே.எல் ராகுலுக்கு பதிலா பார்மில் இருக்கும் அவரை டீமில் சேருங்க – கவாஸ்கர் ஓபன்டாக்

இதனால் இலங்கை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடும் நிலையில் மீண்டும் வம்பிழுத்து தோல்வியை சந்தித்த வங்கதேசத்தை அனைத்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement