NED vs PAK : இவர போயா ரொனால்டோ, மெஸியுடன் ஒப்பிட்டீங்க – பாபர் அசாமை கலாக்கும் ரசிகர்கள், எதற்குனு பாருங்க

Babar
- Advertisement -

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ரோட்டர்டம் நகரில் ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் கடுமையாக போராடிய நெதர்லாந்தை சிறிய வித்யாசத்தில் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த பாகிஸ்தான் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைபற்றியது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நெதர்லாந்தின் தரமான பந்துவீச்சில் 49.4 ஓவரில் வெறும் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் மட்டும் 91 ரன்கள் எடுத்து சதத்தை நழுவ விட்ட நிலையில் எஞ்சிய வீரர்கள் 30 ரன்களை கூட தாண்டவில்லை.

வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை ஆல் அவுட் செய்து சாதனை படைத்த நெதர்லாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 207 என்ற இலக்கை துரத்திய அந்த அணிக்கு மேக்ஸ் ஓதாவத் 3, மூசா அஹமத் 11, பஸ் டீ லீடி 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் மற்றொரு தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 50 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார். மேலும் மிடில் ஆர்டரில் டாப் கூப்பர் 62 ரன்கள் எடுத்ததால் 172/5 என்ற நல்ல நிலையை எட்டி வெற்றியின் விளிம்பு வரை வந்த அந்த அணி கடைசி நேரத்தில் சொதப்பி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:
அதனால் 49.2 ஓவரில் 197 ரன்களை மட்டுமே எடுத்த நெதர்லாந்து கடைசி ஓவர் வரை வெற்றிக்காகப் போராடி வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசிய நசீம் ஷா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. இருப்பினும் இந்த தொடரின் முதல் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நெதர்லாந்து 2வது போட்டியிலும் போராடி 3வது போட்டியிலும் பாகிஸ்தானுக்கு கடுமையான சவால் கொடுத்ததால் நிறைய ரசிகர்கள் அந்த அணியை பாராட்டுகின்றனர். அப்படி கத்துக்குட்டி நெதர்லாந்தை எளிதாக வீழ்த்த முடியாத பாகிஸ்தான் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று தினந்தோறும் பேசி வருவதை நினைத்து இந்திய ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

- Advertisement -

உளறிய பாபர்:
அதைவிட இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நெதர்லாந்தை போட்டியின் முடிவின்போது “ஸ்காட்லாந்து” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பாராட்டி உளறலாக பேசினார். இது பற்றி போட்டி முடிந்ததும் அவர் பேசியது. “நாங்கள் எங்களுடைய பெஞ்ச் பலத்தை சோதித்து பார்த்தோம். இப்போட்டியின் ஆரம்பத்தில் பந்து நன்றாக வரவில்லை. அதனால் முதல் இன்னிங்சில் நாங்கள் ரன்கள் குறைவாகவே அடித்தோம். ஆனால் சிறப்பாக பந்து வீசிய ஸ்காட்லாந்து பவுலர்களுக்கு நீங்கள் பாராட்டை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதை பார்த்த ரசிகர்கள் போட்டி முழுமையாக முடிவதற்குள் எதிரணியின் பெயரை கூட சரியாக நியாயம் வைத்துக்கொள்ளாத பாகிஸ்தான் கேப்டனை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். அதற்கு ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியமும் தனது டுவிட்டரில் கலாய்க்கும் வகையில் பதிலளித்துள்ளது. முன்னதாக இந்த தொடரின் 2வது போட்டியிலும் இதேபோல் போட்டி முடிந்த பின்பு நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆங்கிலத்தில் சரளமாக கூட பேசாமல் திணறிய அவர் நிறைய இலக்கணப் பிழைகளுடன் உளறி உளறி பேசினார்.

- Advertisement -

அதை பார்த்த ரசிகர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய கற்றுக் கொண்ட பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாகி ஒரு வருடம் கழிந்தும் இன்னும் திறம்பட ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கலாய்க்கிறார்கள்.

ரொனால்டோ – மெஸி:
அந்த 2 வீடியோக்களுமே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதே தொடரின் போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் முன்னாள் கீப்பர் வன் டெர் சார் பாகிஸ்தான் வீரர்களை சந்தித்தார். அப்போது எங்களுடைய கேப்டன் பாபர் அசாம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் கலந்த கலவை என்று பாகிஸ்தான் வீரர் சடாப் கான் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதையும் படிங்க : அவங்க 2 பேர் இல்லாம இந்தியா தான் வீக் ஆயிடுச்சு. பாகிஸ்தான் ஸ்ட்ராங் தான் – முன்னாள் பாக் வீரர் கருத்து

அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் சரளமாக ஆங்கிலத்தில் பேசத் தெரியாமல் ஜிம்பாப்வே, நெதர்லாந்து போன்ற அணிகளை அடித்து நொறுக்கி சாதனை படைக்கும் பாபர் அசாமை 2 மகத்தான கால்பந்து ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு பேசிய பாகிஸ்தான் வீரரையும் சேர்த்து ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

Advertisement