போயும் போயும் இதுக்கா சண்டை போடுவீங்க. கிண்டலுக்கு ஆளான மும்பை – சென்னை, கலாய்க்கும் ரசிகர்கள்

csk-vs-mi
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 9-ஆம் தேதியான நேற்று 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடந்த 17-ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை தட்டுத்தடுமாறி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 154/7 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக மொய்ன் அலி 48 (35) ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 155 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் சென்னை பவுலர்கள் வீசிய மோசமான பந்து வீச்சை பயன்படுத்தி 17.4 ஓவர்களிலேயே 155/2 ரன்களை எடுத்து அசத்தலான வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் தொடக்க வீரர் அபிஷேக் வர்மா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

திண்டாடும் சென்னை:
இந்த வருடம் பங்கேற்ற முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்த ஹைதராபாத் தனது முதல் வெற்றியை பதிவு செய்து தோல்வியின் பிடியில் இருந்து மீண்டெழுந்தது மட்டுமல்லாமல் 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தை பிடித்தது. மறுபுறம் இந்த வருடம் பங்கேற்ற முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து ஹாட்ரிக் தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த சென்னை மீண்டும் தோல்வி அடைந்ததால் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

நடப்பு சாம்பியனாக களமிறங்கினாலும் இதுவரை கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் விளையாடி வரும் சென்னை இப்படி அடுத்தடுத்த தோல்விகளுடன் புள்ளி பட்டியலின் அடிப்பகுதியில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

நண்பேன்டா மும்பை:
அந்த போட்டியைத் தொடர்ந்து நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த 18-ஆவது லீக் போட்டியில் வலுவான மும்பையை எதிர்கொண்ட பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புனேவில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151/6 ரன்கள் எடுத்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 50/1 என சிறப்பாக தொடங்கினாலும் அதன்பின் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பரிசளித்ததால் 62/5 என திடீரென திண்டாடியது. அந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட அதிரடியாக 68* ரன்கள் குவித்து காப்பாற்றினார். பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஹஸரங்கா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 152 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு இளம் தொடக்க விரர் அனுஜ் ராவத் 47 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 66 ரன்களும் நட்சத்திர வீரர் விராட் கோலி 36 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 48 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக 18.3 ஓவர்களிலேயே 152/3 ரன்கள் எடுத்து இலக்கை எட்டிய அந்த அணி இந்த வருடம் பங்கேற்ற 4 போட்டிகளில் தொடர்ச்சியான 3-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியது. மறுபுறம் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இதே நிலைமையில் தடுமாறி நிற்கும் சென்னைக்கு “நண்பேண்டா” என்பதுபோல் தோள் கொடுத்துள்ளது.

கலாய்க்கும் ரசிகர்கள்:
இந்த வருடம் பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற சொதப்பும் அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. அதேபோல் நேற்று முளைத்த காளான்களாக புதிய அணிகளான லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் டாப் இடங்களில் ஜொலிக்கின்றன. ஆனால் 5 மற்றும் 4 கோப்பைகளை வென்று வரலாற்றில் வெற்றிகரமான முதல் 2 அணிகளாக சரித்திர சாதனை படைத்துள்ள மும்பையும் சென்னையும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இப்படி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலின் அடிபாகத்தில் திண்டாடுவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

அதேசமயம் வெற்றிகரமான அணிகள் என பெயரெடுத்த இவ்விரு அணிகள் கடைசி இடத்திற்காக போட்டி போடுவதை பார்க்கும் ரசிகர்களால் கலாய்க்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் இந்த தொடரில் சென்னை எப்படியெல்லாம் தோற்கிறதோ அதே போல மும்பையும் தோற்று தோள் கொடுக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் வெற்றி பெற்றாலும் இந்த அணிகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுகிறது. தோற்றாலும் சேர்ந்து தோல்வியடைகிறது என்பதால் ஐபிஎல் தொடரில் இந்த 2 அணிகள் தான் உண்மையான நண்பர்கள் என்று காலாய்க்கின்றனர்.

மேலும் நேற்றைய ஹைதராபாத்துக்கு எதிரான தோல்விக்குப் பின் புள்ளி பட்டியலில் சென்னை 9-வது இடத்தில் இருந்த நிலையில் மும்பை 10-வது இடத்தில் இருந்தது. ஆனால் நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த மும்பை ரன்ரேட் அடிப்படையில் சென்னையை பின்னுக்கு தள்ளி 9வது இடம் பிடித்துள்ளது. தற்போது சென்னை 10-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : அவருக்கு வாய்ப்பே தரமாட்டேன். வேண்டுமென்றே இளம்வீரரை மறுத்து வரும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

இப்படி ஒரு காலத்தில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வந்த அணிகள் இன்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு மல்லு கட்டுவது ரசிகர்களுக்கு சிரிப்பை விட வேதனையைத் தான் அதிகமாக கொடுக்கிறது.

Advertisement