அட்டகாசமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற 40-ஆவது லீக் போட்டி ரசிகர்களுக்கு உண்மையாகவே அட்டகாசமாக அமைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் ஹைதராபாத் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சம அளவில் மோதிக்கொண்ட நிலையில் ஹைதராபாத்தை விட கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 195/6 ரன்கள் விளாசியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக 65 (42) ரன்களும் ஐடன் மார்க்ரம் 56 (40) ரன்களும் எடுத்தனர். குஜராத் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய முகமது சமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மிரட்டிய உம்ரான்:
அதை தொடர்ந்து 196 என்ற பெரிய இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரித்திமான் சஹா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது பந்தை கையில் எடுத்த 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் சுப்மன் கில்லை 22 (24) ரன்களில் கிளீன் போல்டாக்கி அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 (6) ரன்களில் செய்து அவுட்டாக்கினார்.

அதோடு நிற்க அவர் மறுபுறம் 68 (38) ரன்கள் எடுத்து சிறப்பாக பேட்டிங் செய்த ரித்திமான் சாஹாவின் ஸ்டம்புகளை தெறிக்க விட்டு 15-வது ஓவரில் டேவிட் மில்லர் 17 (19) அபினவ் மனோகர் 0 (1) என அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து மிரட்டியதால் போட்டி அப்படியே முழுமையாக ஹைதராபாத் பக்கம் வந்தது.
தெறிக்கவிட்ட திவாடியா – ரஷீத் கான்:
குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டதால் குஜராத் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்த வேளையில் களமிறங்கிய ராகுல் திவாடியா சரவெடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டு போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அவருக்கு ஜோடியாக ரசித் கான் கை கோர்த்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 1, 6, 0, 6, 6 என அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்கவிட்ட இந்த ஜோடி யாருமே எதிர்பாராத வகையில் குஜராத்துக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதில் ராகுல் திவாடியா 40* (21) ரன்களும் ரசித் கான் 31* (11) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தாலும் கூட 5 விக்கெட்டுகள் எடுத்து பந்து வீச்சில் பட்டாசாக செயல்பட்ட இளம் வீரர் உம்ரான் மாலிக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
யாருப்பா இந்த சிங்:
இந்த போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தாலும் அந்த அணிக்கு அபிஷேக் சர்மா, உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அதிலும் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்தபோது 18.1-வது ஓவரில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் ரன் அவுட்டானதும் தனது அறிமுக போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய இளம் வீரர் ஷஷாங்க் சிங் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரியை தெறிக்க விட்டார். அதன்பின் 2, 1 ரன்களுடன் ஸ்ட்ரைக்கை மாற்றிய அவருக்கு கடைசி ஓவரில் உலகத்தரம் வாய்ந்த அதிரடி வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் நியூசிலாந்தின் லக்கி பெர்குசன் வீசிய கடைசி 3 பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அந்த 3 பந்துகளிலும் அடுத்தடுத்து தெறிக்கவிடும் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட அவர் வெறும் 6 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26* ரன்கள் விளாசி ஹைதராபாத்துக்கு அறிமுக போட்டியிலேயே வெறித்தனமான பினிஷிங் கொடுத்தார். அவரின் ஆட்டத்தை பார்த்த பல ரசிகர்களும் ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்களும் யாருப்பா இந்த ஷஷாங்க் சிங் என்று வியந்து போய் பாராட்டுகின்றனர்.
கோலியை முந்தி சாதனை:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக வெறும் 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார். அந்த வகையில் சென்னைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானாலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு பெறாத நிலையில் நேற்றைய போட்டியில் முதல் முறையாக களமிறங்கி 416.66 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் வெளுத்து வாங்கினார்.
இதையும் படிங்க : வீடியோ : என்னடா பந்து வீசுற நீ. கோபத்தில் கொந்தளித்த முரளிதரன். என்ன நடந்தது? – கெட்ட வார்த்தையில வேற திட்டிட்டாரு
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை விளாசிய இந்திய பேட்ஸ்மேன் (குறைந்தது 25 ரன்கள்) என்ற விராட் கோலியின் சாதனையை முந்தி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஷஷாங்க் சிங் : 416.66, குஜராத்துக்கு எதிராக, 2022*
2. பாலச்சந்தரா அகில் : 385.71, டெக்கானுக்கு எதிராக, 2008
3. விராட் கோலி : 357.14, ராஜஸ்தானுக்கு எதிராக, 2017.



