அப்படி சண்டை போட்டவங்களா? இன்னைக்கு ஒரே டீம்ல இவ்ளோ அன்பா இருக்காங்க – நெகிழவைத்த தருணம்

Deepak Hooda Krunal Pandya
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று மார்ச் 28-ஆம் தேதி நடந்த 4-வது லீக் போட்டியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் மோதின. வரலாற்றின் புதிய ஐபிஎல் அணிகள் என்பதால் இந்த போட்டிக்காக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் புதிய கேப்டன் மற்றும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த ஓவரிலேயே குயின்டன் டி காக் 7 ரன்கள், மனிஷ் பாண்டே 6 ரன்கள் என அடுத்தடுத்து முகமது சமியின் அனல் பறக்கும் பந்தில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

லக்னோ போராடி 158 ரன்கள் சேர்ப்பு:
அந்த மோசமான நேரத்தில் அதிரடி வீரர் எவின் லெவிஸ் 10 ரன்களில் அவுட்டானதால் 29/4 என்ற படுமோசமான தொடக்கத்தை லக்னோ பெற்றது. அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் பொறுப்புடனும் நிதானத்துடனும் பேட்டிங் செய்து நேரம் செல்ல செல்ல அதிரடியை காட்டினார். 5-வது விக்கெட்டுக்கு முக்கியமான 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் தீபக் ஹூடா 41 பந்துகளில் அரைசதம் அடித்து 55 ரன்களும் இளம் வீரர் ஆயுஷ் படோனி 41 பந்துகளில் அரைசதம் அடித்து 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் க்ருனால் பாண்டியா 13 பந்துகளில் 21* ரன்களில் நல்ல பினிஷிங் கொடுத்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடிய லக்னோ 158/6 ரன்களை சேர்த்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது சமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் சுப்மன் கில் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 4 ரன்களில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:
இதனால் 15/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற குஜராத் அணிக்கு கேப்டன் ஹர்டிக் பாண்டியா பொறுப்புடன் பேட்டிங் செய்து 28 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க அவருடன் விளையாடிய மேத்யூ வேட் 29 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதிலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய ராகுல் தேவாடியா வெறும் 24 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 40* ரன்களும் அபினவ் மனோகர் 7 பந்துகளில் 15* ரன்களும் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தனர். குஜராத் சார்பில் துஷ்மண்டா சமீரா 2 விக்கெட்களை எடுத்தனர்.

இதனால் 19.4 ஓவர்களில் 161/5 ரன்கள் எடுத்த குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்றின் தங்களது முதல் ஐபிஎல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஒன்று சேர்ந்து லக்னோ அணிக்காக விளையாடுவதை ஆரம்பம் முதலே ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனித்தார்கள். ஏனெனில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த வருடம் நடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் தொடரில் பரோடா அணிக்காக விளையாடியபோது சண்டை போட்டுக் கொண்டனர்.

- Advertisement -

ஒன்று சேர்ந்த நீரும் நெருப்பும்:
குறிப்பாக அந்த தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது பரோடா அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா தம்மை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டியதாக தீபக் ஹூடா புகார் எழுப்பினார். அந்த புகாரின் இறுதியில் பரோடா அணிக்காக விளையாட தீபக் ஹூடாவுக்கு அந்த மாநில கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. அதனால் மனமுடைந்த தீபக் ஹூடா அதன்பின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து அந்த அணிக்காக விளையாடி தற்போது இந்திய அணியில் விளையாட தொடங்கியுள்ளார்.

அப்படிப்பட்ட நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் இவர்கள் லக்னோ அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்போது முதலே லக்னோ அணிக்காக இந்த இருவரும் ஒன்று சேர்ந்து எப்படி விளையாட போகிறார்கள், களத்தில் மீண்டும் சண்டை போட்டுக்கொள்வார்களா என்பதைப் பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதையும் படிங்க : நான் மட்டும் விளையாடிருந்தால் அசால்ட்டாக 15 கோடிக்கு ஏலம் போயிருப்பேன் – முன்னாள் இந்திய ஜாம்பவான்

அப்படிப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஒன்று சேர்ந்து விளையாடிய இவர்கள் தமிழக வீரர் விஜய் சங்கரை இலங்கை வீரர் துஷ்மண்டா சமீரா க்ளீன் போல்ட் செய்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள். அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அப்படியே வியப்பில் ஆழ்ந்து “ஈஸ்வரா நீரும் நெருப்பும் பிரன்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா” என்பதுபோல சமூக வலைதளங்களில் கலகலப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement