IND vs AUS : இவரப்போய் ஏபிடி’யுடன் கம்பேர் பண்றிங்களே, பேசாம அவருக்கு சான்ஸ் கொடுங்க – சூர்யகுமார் மீது ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் 117 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா சென்னையில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியிலும் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2019க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை முதல் முறையாக மண்ணை கவ்வ வைத்து 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தையும் தனதாக்கியது.

முன்னதாக இந்த தொடரில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சூரியகுமார் யாதவ் முதலிரண்டு போட்டிகளில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் கொஞ்சம் கூட மாறாமல் அச்சில் வார்த்தார் போல் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. அதனால் விமர்சனங்களையும் சந்தித்த அவர் ரோகித் சர்மாவின் ஆதரவுடன் வாய்ப்பு பெற்ற 3வது போட்டியிலும் கொஞ்சம் கூட முன்னேறாமல் அஸ்டன் அகர் சுழலில் இம்முறை சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்ட்டாகி கோல்டன் டக் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

- Advertisement -

ரசிகர்கள் ஏமாற்றம்:
அதன் வாயிலாக உலகிலேயே ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான முதல் வீரர் என்ற காலத்தால் அழிக்க முடியாத மோசமான உலக சாதனையை சூரியகுமார் யாதவ் படைத்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரவெடியாக அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராகவும் அவதரித்துள்ளார்.

குறிப்பாக எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்ற வகையில் விக்கெட் கீப்பர் திசைக்கு மேல் உட்பட மைதானத்தின் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத புதுப்புது ஷாட்டுகளால் எதிரணி பவுலர்களை பந்தாடும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். சொல்லப்போனால் விரைவில் தமையும் நீங்கள் மிஞ்சுவீர்கள் என்று ஏபி டீ வில்லியர்ஸ் அவரை மனதார பாராட்டினார்.

- Advertisement -

இருப்பினும் உண்மையாகவே உருண்டு புரண்டு பலவிதமான புதிய ஷாட்களை அறிமுகப்படுத்தி கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய ஏபி டீ வில்லியர்ஸ் டி20 கிரிக்கெட்டில் சரவெடியாகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் 36 பந்துகளில் அதிவேகமாக சதமடித்து மொத்தம் 25 சதங்களையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 54.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 22 சதங்களையும் அடித்து 3 வகையான கிரிக்கெட்டிலும் சகலகலா வல்லவனாக சர்வதேச கிரிக்கெட்டில் 20000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார்.

ஆனால் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சொதப்பிய சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் 24.07 என்ற சுமாரான சராசரியில் பேட்டிங் செய்து வருகிறார். எனவே டி20 கிரிக்கெட்டில் மட்டும் அசத்தக்கூடிய அவரை 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜொலித்த ஏபி டீ வில்லியர்ஸ் உடன் இப்போதே ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று நிறைய ரசிகர்கள் ஏமாற்றத்தை தெரிவிக்கிறார்கள்.

இதையும் படிங்க: வீடியோ : முறைத்த ஸ்டோய்னிஸ், மாஸ் பதிலடி கொடுத்த கிங் கோலி – பாண்டிங், ஜேக் காலிஸை மிஞ்சி 2 புதிய சாதனை

அத்துடன் ஆரம்பம் முதலே ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு வலுக்கட்டாயமாக வாய்ப்பு கொடுக்கும் இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்றும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் கடைசி 8 ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் முறையே 36, 2, 30*, 86*, 15, 43*, 6*, 54 என நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தை விளாசுகிறார்கள்.

Advertisement