
செப்டம்பர் 6ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2022 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தம் நிறைந்த முதல் சூப்பர் 4 போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று இலங்கையை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடுமையாக போராடி 173/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி 0, ராகுல் 6, ஹர்திக் பாண்டியா 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 72 (41) ரன்களை விளாசி அவுட்டானார்.
அதை துரத்திய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே மிரட்டலாக பேட்டிங் செய்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியப் பவுலர்களைப் பந்தாடிய ஓபனிங் ஜோடியில் நிஷாங்கா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (47) ரன்களும் குஷால் மெண்டிஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (37) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக அஸலாங்கா 0, குணதிலகா 1 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேர ஓவர்களில் கச்சிதமாக செயல்பட்ட கேப்டன் தசுன் சனாக்கா 33* (18) ரன்களும் பனுக்கா ராஜபக்சா 25* (17) ரன்களும் குவித்து பினிஷிங் கொடுத்தனர்.
சொதப்பிய ரோஹித்:
அதனால் 19.5 ஓவரில் 174/4 ரன்கள் எடுத்து வென்ற இலங்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 4 போட்டியிலும் வென்றிருந்த காரணத்தால் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் 180 ரன்களை கூட தொடாத இந்தியா பந்து வீச்சிலும் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி தோல்வியை தழுவியது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாலும் இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்வதற்கான வாய்ப்பு 99% மங்கிப் போயுள்ளது.
இந்த தொடரின் ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சொதப்பி வந்த கேப்டன் ரோகித் சர்மா ஒரு வழியாக இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்தார். ஆனால் இதர பேட்ஸ்மேன்கள் அவரது போராட்டத்தை வீணடித்த நிலையில் அனல் பறந்த இந்த போட்டியில் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் அனுபவம் வாய்ந்த சீனியர் பவுலர் என்பதையும் மறந்து மீண்டும் 14 ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை வார்த்தார்.
அர்ஷ்தீப் மீது சலிப்பு:
அதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு வெறும் 7 ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் மீண்டும் பந்து வீசிய அனுபவமில்லாத இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் 1, 1, 2, 1 என முடிந்தளவுக்கு போராடி 5வது பந்தில் 2 லெக் பைஸ் கொடுத்து தோல்வியடைந்தார். முன்னதாக அந்த ஓவரை வீசுவதற்காக வந்த அவர் சிறப்பாக பந்து வீசுவதற்கு தமக்கு தேவையான இடத்தில் பீல்டர்களை நிறுத்துமாறு கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்க வந்தார்.
ஆனால் அவரை கண்டதும் என்னமோ எதிரியை பார்த்ததை போல் முகம் கொடுக்காத ரோகித் சர்மா திரும்பி சென்றார். அதனால் தனது புத்திக்கு பந்து வீசிய அர்ஷிதீப் சிங் 5வது பந்து வரை போராடி போட்டியை எடுத்து வந்தார். ஆனால் தனது அணி வீரருக்கு அதுவும் அனுபவமில்லாத இளம் வீரருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆலோசனை கொடுக்காமல் முகத்தை திருப்பிக்கொண்ட ரோகித் சர்மாவை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய போட்டியில் ஆசிப் அலி கொடுத்த கேட்சை முக்கிய நேரத்தில் அர்ஷ்தீப் சிங் கோட்டை விட்டதால் தோல்வியடைந்ததை மனதில் நினைத்துக் கொண்டு அவரிடம் ரோகித் சர்மா இவ்வாறு நடந்து கொண்டதாகவும் ரசிகர்கள் உண்மையை வெளுக்கிறார்கள். அப்படி பார்த்தால் அந்த போட்டியில் தாமும் சுமாராக செயல்பட்டதை நினைத்து ரோகித் சர்மா தன்னைத் தானே குறை சொல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் சாடுகிறார்கள்.
இதையும் படிங்க : பெரிய பெயர்களை வீட்டுக்கு அனுப்புனாலே வெற்றி தாமாக வரும் – இலங்கை தோல்வியின் வேதனையால் ரசிகர்கள் அதிருப்தி
அத்துடன் அணி வீரர்கள் தவறு செய்தாலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் ஆதரவு கொடுப்பதே கேப்டனுடைய கடமை என்ற நிலைமையில் ஐபிஎல் தொடரில் தோனியை மிஞ்சி 5 கோப்பைகள் வென்றாலும் இந்த தலைமைப் பண்பை தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று ரோகித் சர்மாவை ரசிகர்கள் வெளுத்து வாங்குகிறார்கள்.