அதிரடி மெண்டிஸை குறுக்கு வழியில் அவுட்டாக்கியதா பாக் அணி? மீண்டும் ஆதாரத்தை முன்வைக்கும் ரசிகர்கள்

Kushal Mendis 2
- Advertisement -

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் 2வது வெற்றியை ருசித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 344/9 ரன்கள் குவித்து உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது.

அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 122 ரன்களும் சமரவிக்கிரமா 108 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 345 ரன்கள் துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 12, பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் நங்கூரமாக விளையாடி சதமடித்து 113 ரன்களும் முகமது ரஹ்மான் சதமடித்து 131* ரன்கள் குவித்தார்கள்.

- Advertisement -

அம்பலமாக்கிய ரசிகர்கள்:
அவர்களுடன் சவுத் ஷாக்கில் 31 ரன்களும் இப்திகார் அகமது 22* ரன்களும் எடுத்ததால் 48.2 ஓவரில் 345 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்து மிரட்டியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

முன்னதாக இத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பவுண்டரி எல்லையை ஃபீல்டிங் செய்யும் போது தவறுதலாக தள்ளி சென்றது போல் நைசாக நகர்த்தி வைத்திருந்ததை ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். குறிப்பாக கேட்ச் பிடிப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக பாகிஸ்தான் வீரர்கள் பவுண்டரி எல்லையை 1 முதல் 2 அடிகள் வரை நகர்த்தி வைத்திருந்ததை புகைப்படத்துடன் சுட்டி காட்டிய இந்திய ரசிகர்கள் ஐசிசி விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் கொடுத்த கேட்ச்சை பவுண்டரி எல்லையில் பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக் பிடித்தார். ஆனால் அந்த கேட்ச்சை பிடித்த பின் மைதானத்தில் அவர் கீழே விழும் போது நன்றாக அந்த இடத்தில் பவுண்டரி 2 அடிகள் பின்னோக்கி தள்ளி இருந்தது புற்கள் வளராத பகுதியால் தெளிவாகத் தெரிந்தது.

அதனால் ஒருவேளை நடுவர்கள் நிர்ணயித்தவாறு பவுண்டரி எல்லை இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அது சிக்ஸராக மாறியிருக்கும். எனவே பாகிஸ்தான் வீரர்கள் குறுக்கு வழியில் குசால் மெண்டிஸை அவுட்டாக்கியதாக தற்போது ரசிகர்கள் மீண்டும் அந்த தருணத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதுடன் ஐசிசி இதை பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்காக பவுண்டரி எல்லை விதிமுறைப்படி ஐசிசி மேற்பார்வையின் கீழ் அதிகப்படுத்தப்பட்டுள்ளது தெரியாமலே ரசிகர்கள் விமர்சிப்பது குறிப்பிடப்பட்டது.

Advertisement