அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அதன் காரணமாக நேற்று மதியம் 3.30 மணிக்கு தங்களுடைய கடைசிப் போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்த மும்பை 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு வழக்கம் போல இதர வீரர்கள் சொதப்பியும் விராட் கோலி சதமடித்து 101* (61) ரன்கள் குவித்து காப்பாற்றிய உதவியுடன் 198 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதைத் துரத்திய குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதும் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் சுப்மன் கில் சதமடித்து 104* (52) ரன்கள் எடுத்த உதவியுடன் பெங்களூருவை அதன் சொந்த ஊரில் தோற்கடித்தது. அதனால் லீக் சுற்றுடன் வெளியேறிய பெங்களூரு வரலாற்றில் 16வது முறையாக தங்களுடைய முதல் லட்சிய கோப்பை வெல்ல முடியாமல் மீண்டும் பரிதாபத்தை சந்தித்தது.
ஆணவத்தின் உச்சகட்டம்:
மறுபுறம் பெங்களூரு தோற்றதால் பிளே ஆஃப் சுற்றுச் சென்ற மும்பை அணியினர் அதை கொண்டாடியதில் ஒரு நியாயம் இருக்கும் என்றாலும் லக்னோவுக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் சம்பந்தமின்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக சிரித்துக் கொண்டாடியது பெங்களூரு ரசிகர்களிடம் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த தொடரில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவருக்கும் விராட் கோலிக்கும் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. மேலும் அப்போட்டியின் முடிவில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையாக மாறியது.
ஆனால் அந்த நிகழ்வுக்கு பின் நடந்த போட்டியில் லக்னோ தோற்ற போது சஹா, ரசித் கான் போன்ற குஜராத் வீரர்களை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டியிருந்தார். அதற்கு பழி வாங்கும் வகையில் அடுத்த போட்டியில் பெங்களூரு தோற்ற போது அதற்கு காரணமாக இருந்தால் சில மும்பை வீரர்களை கெளதம் கம்பீர் பாராட்டினார். அதை விட அந்தப் போட்டியில் பெங்களூரு தோற்பதை மாம்பழம் சுவைத்துக்கொண்டே பார்த்த நவீன் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பெரிய சர்ச்சையாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் “கோலி கோலி” என்று கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா ரசிகர்களுக்கு வாய் மீது கை வைத்து மிரட்டி அவர் பதிலடி கொடுத்தார். ஆனால் அதே போட்டியில் 19வது ஓவரில் 20 ரன்களை விளாசிய ரிங்கு சிங் அவரை 110மீ மெகா சிக்ஸராக பறக்க விட்டது தக்க பதிலடியாக அமைந்ததாக விராட் கோலி ரசிகர்கள் கொண்டாடினர். அந்த நிலைமையில் இந்த போட்டியில் பெங்களூரு தோற்றதால் மனமுடைந்த விராட் கோலி பெவிலியனில் மிகவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார்.
மறுபுறம் நவீன் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆப்பிரிக்க பத்திரிக்கையாளர் “கடவுள் எங்களுக்கு எவ்விதமான கருணையும் காட்டவில்லை” என்று சொல்லி சிரிக்கும் பிரபல வீடியோவை பதிவிட்டு பெங்களூருவின் தோல்வியை கொண்டாடியுள்ளார். அதாவது சில வருடங்களுக்கு முன்பாக வேறொரு விளையாட்டில் ஒரு அணி தோற்றதை தொலைக்காட்சியில் படிக்கும் போது சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அந்த ஆப்பிரிக்கன் செய்தி வாசிப்பாளர் வெறித்தனமாக சிரித்து விடுவார்.
naveen ul haq tumhara rail banaya jaayega! Behaving like a troll mf pic.twitter.com/GX0vIxpTUc
— BALA (@erbmjha) May 21, 2023
அந்த வீடியோ இன்றளவும் உலக அளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் தமக்கு அது மிகவும் பிடிக்கும் என இத்தொடரின் துவக்கத்தில் ஏபி டீ வில்லியர்ஸ் உடன் நிகழ்த்திய உரையாடலில் விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோவை தான் தற்போது விராட் கோலிக்கு பதிலடியாக கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பெங்களூரு தோல்வியை வெறித்தனமாக சிரித்து அவர் கொண்டாடியுள்ளார்.
இதையும் படிங்க:MI vs SRH : என்னோட பவர் ஹிட்டிங்கிற்கு காரணம் இதுதான். முதல் ஐ.பி.எல் சதத்திற்கு பிறகு – ஆட்டநாயகன் கேமரூன் க்ரீன் பேட்டி
ஆனால் என்னதான் சண்டை இருந்தாலும் எதிரணியின் வெற்றியை ஒரு வீரராக இருந்து கொண்டு இப்படி கொண்டாடுவது ஆணவத்தின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். அதனால் இப்போட்டியில் தோற்றாலும் எங்களுடைய விராட் கோலி ஜாம்பவான் என்று பதிலடி கொடுக்கும் இந்திய ரசிகர்கள் இந்த மாதிரியான அணுகுமுறையை கொண்ட நீங்கள் என்றும் பெரிய அளவில் வரப்போவதில்லை என்று விமர்சிக்கின்றனர்.



