ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்ற 20-ஆவது லீக் போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றன. மும்பை வான்கடே மைதானத்தில் கடைசி ஓவர் வரை அனல் பறந்த அந்த போட்டியில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்த ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது. அந்த த்ரில்லான வெற்றியால் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள ராஜஸ்தான் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165/6 ரன்களை போராடி எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மையர் வெறும் 36 பந்துகளில் 59* ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார். லக்னோ சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அசத்திய கிருஷ்ணப்பா கெளதம் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
லக்னோ போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 166 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு முதல் ஓவரை வீசிய டிரென்ட் போல்ட் முதல் பந்திலேயே லக்னோவின் கேப்டன் கேஎல் ராகுலையும் 2-வது பந்தில் கெளதமையும் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டினார். இதனால் 1/2 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 8 (14), தீபக் ஹூடா 25 (24), ஆயுஷ் படோனி 5 (7) ஆகிய முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.
அந்த நிலையில் மறுபுறம் போராடிக்கொண்டிருந்த குவின்டன் டி காக் 39 (32) ரன்களில் அவுட்டானதால் 101/6 என தடுமாறிய லக்னோவின் தோல்வி உறுதியானது. இருப்பினும் கடைசி நேரத்தில் க்ருனால் பாண்டியா அதிரடியாக 22 (15) ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அவருடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டதால் திடீரென போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிலும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது அதை அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இளம் இந்திய வீரர் குல்தீப் சென் அபாரமாக வீசி முதல் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்தார். இருப்பினும் 5-வது பந்தில் பவுண்டரியை பறக்கவிட்ட ஸ்டானிஸ் 6-வது பந்தில் சிக்ஸர் அடித்த போதிலும் தனது அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் ஏமாற்றமடைந்தார்.
சொதப்பல் ராகுல்:
நேற்றைய போட்டியில் நூலிழையில் லக்னோ வெற்றியை தவிர விடுவதற்கு அதன் கேப்டன் கேஎல் ராகுல் எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். ஏனெனில் அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டோனிஸ் வெறும் 17 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உட்பட 38* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றிக்காக போராடினார்.
ஆனால் தவறு என்னவெனில் பொதுவாகவே மிடில் ஆர்டரில் அதிரடியாக வெளுத்து வாங்கும் அவரை நேற்றைய போட்டியின் போது லோயர் மிடில் ஆர்டரில் அதுவும் 8-வது இடத்தில் கேஎல் ராகுல் களமிறக்கிவிட்டு வெற்றியை கோட்டை விட்டார். ஏனெனில் அந்த அளவுக்கு அபாரமாக பேட்டிங் செய்த அவர் பேட்டிங் வரிசையில் இன்னும் சற்று மேலே களமிறங்கியிருந்தால் நிச்சயமாக அதே அதிரடியை முன்கூட்டியே காட்டி வெற்றி பெற வைத்திருக்க முடியும்.
ஆனால் 8-வது இடத்தில் களமிறங்கி செட்டிலாகி அதிரடி காட்டுவதற்கு முன்பாகவே ஓவர்கள் முடிந்து போட்டியும் தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும்போது கூட 4, 5, 6 ஆகிய இடங்களில் தான் ஸ்டாய்நிஸ் விளையாடுவதை தெரிந்தும் நேற்றைய போட்டியில் வித்தியாசமான முடிவை எடுத்த கேஎல் ராகுல் இறுதியில் அதற்காக பல்ப் வாங்கினார்.
பிடித்தது கோல்ட்:
கேப்டன்ஷிப்பில் தான் அப்படி சொதப்பினாரா என்று பார்த்தால் பேட்டிங்கிலும் அதுவும் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ட்ரெண்ட் போல்ட் வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்ட்டான அவர் கோல்டன் டக் அவுட்டாகி சொதப்பினார். நேற்றைய போட்டியில் மட்டும் தான் அப்படி அவுட்டானாரா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஆம் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே முகமது சமி வீசிய அற்புதமான பந்தை எதிர்கொண்ட அவர் இதேபோல கோல்டன் டக் அவுட்டானார்.
அந்த நிலையில் நேற்றைய போட்டியில் 2-வது முறையாக கோல்டன் டக் அவுட்டான அவருக்கு கோல்ட் என்றால் மிகவும் பிடிக்கும் போல என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர். மேலும் கடந்த 2021 வரை வரை தனது ஐபிஎல் கேரியரில் ஒரு முறை கூட கோல்டன் டக் அவுட்டாகாத அவர் இந்த வருடம் 5 போட்டிகளில் 2 முறை அந்த வகையில் அவுட்டாகி உள்ளார் என்பது வியப்படைய வைக்கிறது.
இதையும் படிங்க : நேரலையின் போது ஒரே ஒரு கேள்வியால் இங்கிலாந்து வர்ணனையாளரை திகைக்க வைத்த – சுனில் கவாஸ்கர்
அத்துடன் இந்த வருடம் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் பொறுப்புடன் பொறுமையாக விளையாட வேண்டும் என நினைப்பதால் அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் ரன்களும் வெகுவாக குறைந்துள்ளது.



