காலமும் ஜெர்ஸியும் மாறினாலும் சொதப்பலில் மாறாத தடவல் நாயகன் – வெறுப்பில் கலாய்க்கும் ரசிகர்கள்

KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அனல் தெறிக்க நடைபெற்ற போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலக கோப்பையில் கொடுத்த வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. கடைசி ஓவர் வரை திரில்லாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது. கேப்டன் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* (42) ரன்களும் இப்திகார் அகமது 51 (34) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா 40 (37) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் அவரை விட பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்த விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் எடுத்த போதிலும் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

தடவல் நாயகன்:
அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி பந்தில் ஒய்ட் பந்தை அழகாக விட்ட அஸ்வின் மீண்டும் வீசப்பட்ட பந்தில் லாவகமாக தூக்கி அடித்து இந்தியாவை 20 ஓவரில் 160/6 ரன்கள் எடுக்க வைத்து வெற்றி பெற வைத்தார். ஆனால் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா, சூரியகுமார் போன்ற முக்கிய வீரர்கள் அவுட்டானது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக குறைந்தது 30 ரன்களை அடித்து கொடுக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடியில் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்திலேயே பேட்டிங் செய்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் எட்ஜ் வாங்கி போல்டாகி சென்றது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

கடந்த 2019 முதல் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷின் என்று வல்லுநர்கள் அழைக்கும் அளவுக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள இவர் உண்மையாகவே பெரும்பாலும் கத்துக்குட்டி அணிகளை புரட்டி எடுப்பதும் பெரிய அணிகளுக்கு எதிராக முக்கிய போட்டிகளில் சொதப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் என்று சமீப காலங்களாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குறிப்பாக கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக ஷாஹீன் அப்ரிடியிடம் இதே போல அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் தடவிய ராகுல் 8 பந்துகளை எதிர்கொண்டு இறுதியில் கிளீன் போல்ட்டாகி சென்றார்.

- Advertisement -

இறுதியில் அப்போட்டியில் வரலாற்று தோல்வி பரிசாக கிடைத்த நிலையில் அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நாசிம் ஷா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் மீண்டும் தோல்வி காரணமாக அமைந்தார். அந்த நிலையில் நேற்று 90000 ரசிகர்கள் கூடியிருந்த மெல்போர்ன் மைதானத்திலும் 8 பந்துகளை எதிர்கொண்டு தடவிய அவர் அதே நசீம் ஷா’விடம் 4 ரன்களில் அவுட்டானார். இதற்கு முன்பாக கடந்து 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அதே தடவலை வெளிப்படுத்திய ராகுல் 7 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்னில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

இந்த 4 போட்டிகளிலும் இந்தியா 4 வெவ்வேறு கால்ங்களில் 4 வெவ்வேறு ஜெர்சிகளை அணிந்து விளையாடியது. அப்படி காலம் மாறினாலும் ஜெர்சி மாறினாலும் நான் மாற மாட்டேன் என்ற வகையில் கத்துக்குட்டி அணிகளை பார்த்தால் புரட்டி எடுத்து ரன்களை குவிக்கும் ராகுல் முக்கிய போட்டிகளில் ஒன்று சொதப்புவது அல்லது பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி கடைசி நேரத்தில் அவுட்டாவது என்ற அணுகு முறையில் செயல்பட்டு வருவதால் அவரை அதிரடியாக நீக்குமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள்.

Advertisement