IND vs NZ : தயவு செஞ்சு வீட்டுக்கு அனுப்புங்க, 14 போட்டிகளாக சொதப்பும் இளம் வீரர் – ரசிகர்கள் கொதிப்பு

Ishan Kishan
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் போராடி வென்று சமன் செய்தது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவரில் நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி 234/4 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக இளம் வயதில் சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்த சுப்மன் கில் 12 பவுண்டரி 7 சிக்சருடன் 126* (63) ரன்களும் ராகுல் திரிபாதி 44 (22) ரன்களும் ஹர்டிக் பாண்டியா 30 (17) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 235 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டிய இந்திய பந்து வீச்சாளர்களிடம் பதில் சொல்ல முடியாமல் பின் ஆலன் 3, டேவோன் கான்வே 1, மார்க் சாப்மேன் 0, கிளன் பிலிப்ஸ் 2, மைக்கேல் பிரேஸ்வெல் 8 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 21/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு டார்ல் மிட்சேல் 35 (25) ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

வீட்டுக்கு அனுப்புங்க:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்து 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதையும் உலகின் நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்துள்ளது. அப்படி பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா உலக சாதனை வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடையும் ரசிகர்கள் வெறும் 1 (3) ரன்னில் அவுட்டான இஷான் கிசானை மறக்காமல் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

ஏனெனில் 2020 ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்டதால் 2021இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் போட்டியில் அரை சதமடித்து அசத்திய அவர் 2022 சீசனில் 15 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். அந்த சீசனில் பார்மை இழந்து படுமோசமாக செயல்பட்ட அவர் மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடிக்க முக்கிய காரணமாகவும் அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் அசத்தலாக செயல்பட்டு கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிரடியாக இரட்டை சதமடித்து உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

அதனால் பார்முக்கு திரும்பி விட்டதாகவும் அதிரடியான இடது கை தொடக்க வீரர் கிடைத்து விட்டதாகவும் இவரை நினைத்து ரசிகர்கள் பெருமை அடைந்தனர். ஆனால் அந்த இரட்டை சதத்துக்கு பின் வாய்ப்பு பெற்ற அனைத்து போட்டிகளிலும் சொதப்பிய அவர் இலங்கை மற்றும் நியூசிலாந்து டி20 தொடரில் படுமோசமாக செயல்பட்டுள்ளார். அதிலும் குறிப்பாக இந்தியாவுக்காக கடைசியாக களமிறங்கிய 14 டி20 போட்டிகளில் முறையே 27, 15, 16, 3, 8, 11, 36, 10, 37, 2, 1, 4, 19, 1 என ஒரு அரை சதம் கூட அடிக்காமல் வெறும் 200 ரன்களை 14.28 என்ற படுமோசமான சராசரியில் 105.26 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

இத்தனைக்கும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த அகமதாபாத் மைதானத்தில் கூட அவர் அடிக்காததால் கடுப்பான ரசிகர்கள் இவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கலாய்த்து தள்ளுகிறார்கள். மேலும் இந்தியாவுக்காக ஒரு போட்டியில் விளையாடி விடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் பல வீரர்கள் தவமாய் காத்துக் கிடக்கும் நிலையில் 14 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை ஓரளவு தொடர்ச்சியாக பெற்ற இவர் தொடர்ந்து சொதப்புவதால் தயவு செய்து வீட்டுக்கு அனுப்புமாறு சமூக வலைதளங்களில் கொதிக்கிறார்கள்.

இதையும் படிங்க: வீடியோ : ஹே எப்புட்றா என்று தமக்கு தாமே வியந்த ஸ்கை, காற்றில் பறந்து 2 அபார கேட்ச்கள் பிடித்த சூரியகுமார்

குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தடவலாக செயல்பட்டு தோல்விக்கு காரணமாகும் வகையில் செயல்பட்ட ராகுலுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இவர் தற்போது அவரை விட மோசமாக செயல்பட்டு வருகிறார். அதனால் கோபமடையும் ரசிகர்கள் அடுத்த தொடரில் இவருக்காக பெஞ்சில் அமர்ந்திருந்த பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Advertisement