IND vs RSA : முக்கிய நேரத்தில் தினேஷ் கார்த்திக்கை அவமானபடுத்திய பாண்டியா, ரசிகர்கள் கோபம் – நடந்தது என்ன?

Hardik Pandya Dinesh Karthik
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியன்று துவங்கியது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவிற்கு ருதுராஜ் கைக்வாட் – இஷான் கிசான் ஆகியோர் 57 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் ருதுராஜ் 23 (15) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியை தொடர்ந்த இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் கடந்து 76 (48) ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பி ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து மிடில் ஆர்டரில் மிரட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (27) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 29 (16) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்று நீண்ட நாட்களுக்குப் பின் திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 31* (12) ரன்கள் குவித்து மிரட்டலான பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 211/4 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

தென்ஆப்பிரிக்கா மாஸ்:
அதை தொடர்ந்து 212 என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 10 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் அடுத்து களமிறங்கிய ட்வயன் பிரிடோரியஸ் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 29 (13) ரன்களை பறக்கவிட்டு அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 81/3 என தடுமாறிய அந்த அணிக்கு இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட் விடுவதை தடுத்து நிறுத்த நிதானமாக பேட்டிங் செய்தனர்.

இருப்பினும் அடுத்த ஒருசில ஓவர்களில் அதிரடியை தொடங்கிய இந்த ஜோடியில் ஒருபுறம் டேவிட் மில்லர் சிக்ஸர்களை பறக்கவிட மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த டுஷன் 29 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்தார். அதை ஷ்ரேயஸ் ஐயர் கோட்டை விட்டதை பயன்படுத்திய அவர் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்களும் அவரைவிட மிரட்டலாக பேட்டிங் செய்த மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (31) ரன்களும் எடுத்து மாஸ் பினிஷிங் கொடுத்தனர். அதனால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

பாண்டியாவின் மமதை:
மறுபுறம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சில் கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதுடன் சுமாரான பீல்டிங் செய்ததால் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் அன்றிச் நோர்ட்ஜெ வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை 3 வருடங்கள் கழித்து முதன்முறையாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது முதல் பந்தாக எதிர்கொண்டு ரன்கள் எடுத்த நிலையில் 2-வது பந்தில் சிங்கள் எடுத்தார்.

அதன்பின் 3-வது பந்தில் ரன்கள் எடுக்காத பாண்டியா 4-வது பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில் 5-வது பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடிக்க முயன்றாலும் சிங்கிள் எடுக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்ப்புறம் பாண்டியாவை விட ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக கடைசி நேரத்தில் களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்து சிறந்த பினிஷர் என்று போற்றப்பட்ட தினேஷ் கார்த்திக் இருந்தபோதிலும் பாண்டியா சிங்கிள் எடுக்கவில்லை.

கடைசி பந்தை நாமே எதிர்கொண்டு சிக்ஸர் அடிக்கலாம் என்ற தன்னிச்சையான அவரின் எண்ணத்திற்கு கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. டி20 போட்டிகளில் வெறும் 1 ரன் கூட வெற்றியை மாற்றக் கூடியது என்ற நிலையில் எதிர்ப்புறம் ஏதேனும் பவுலர் இருந்தால்கூட பாண்டியா அவ்வாறு செய்தது சரியாக இருந்திருக்கும்.

ஆனால் தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடியான பேட்ஸ்மேன் இருந்தும் இந்தியாவுக்காக 1 ரன் எடுக்க விரும்பாமல் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து பெயர் வாங்கலாம் என்று நினைத்த பாண்டியாவை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதிலும் ஐபிஎல் 2022 தொடரின் கோப்பையை கேப்டனாக கோப்பையை வென்ற மமதையில் அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் நிறைய ரசிகர்கள் வெளுத்து வாங்குகின்றனர்.

Advertisement