உங்கள விட அஷ்வின் 100 மடங்கு சிறந்தவர், வன்மத்தை காட்டிய ஹர்பஜன் சிங்கை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன

Ashwin-Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றால் தான் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட காரணத்தால் கடைசியாக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க ஆஸ்திரேலிய களமிறங்குகிறது.

சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் இந்தியாவின் மூத்த ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் தடுமாறிய அவர் தற்போது அனுபவத்தால் முன்னேற்றத்தைக் கண்டு கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஸ்மித்தை 3 முறை சொற்ப ரன்களில் காலி செய்தார். அத்துடன் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய பவுலராக அஷ்வின் உலக சாதனை படைத்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் உட்பட பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

- Advertisement -

வன்மத்தை காட்டிய ஹர்பஜன்:
அதனால் அவரை எதிர்கொள்ள தேவையான திட்டங்களை வகுத்து விட்டதாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே பேசிய மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற வீரர்கள் அஷ்வினை ஆரம்பத்திலேயே மனதளவில் சாய்க்கும் ஸ்லெட்ஜிங் வேலையை தொடங்கினர். அத்தோடு நிற்காமல் அஷ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் வெறியுடன் பெங்களூருவில் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

மொத்தத்தில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் அஸ்வினுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியினர் அதிகமாக வெளிப்படையாக தயாராகி வருகிறார்கள். அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் முதல் போட்டி துவங்குவதற்கு 5 நாட்கள் முன்பாகவே அஷ்வின் ஆஸ்திரேலியாவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பதாக ட்விட்டரில் பாராட்டினார். ஆனால் அதை ஜீரணிக்க முடியாத முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் உண்மையாகவே ஆஸ்திரேலிய அணியினர் அஷ்வினுக்காக பயப்படவில்லை தாறுமாறாக சுழலும் பிட்ச்களை நினைத்து தான் இந்த பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக புகைப்படத்துடன் பதிலளித்தார்.

- Advertisement -

அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அஷ்வின் ஆஸ்திரேலியா அணியின் மண்டைக்குள் ஓடுகிறாரா இல்லையோ ஆனால் உங்களது மண்டைக்குள் எப்போதும் குடி இருக்கிறார் என்று ஹர்பஜன் சிங்கிற்கு பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இத்தனை நாட்களாகியும் கடந்த காலங்களில் அஷ்வின் நிறைய முறை உங்களை பாராட்டியும் இன்னும் வன்மத்தை காட்டுவதை நிறுத்தவில்லையா என்றும் ஹர்பஜன் சிங்கை ரசிகர்கள் விளாசுகிறார்கள். ஏனெனில் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராக இருந்த ஹர்பஜன் சிங் 2011 உலகக் கோப்பைக்கு பின் பார்மை இழந்து தடுமாற்றமாக செயல்பட்டார்.

அதனால் அந்த சமயத்தில் சேவாக் போன்ற முன்னாள் வீரர்களை கழற்றி விட்டு இன்றைய வருங்கால இளம் அணியை உருவாக்கும் வேலையை துவக்கிய அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி சுழல் பந்து வீச்சுத்துறையில் இவருக்கு பதிலாக அஸ்வின், ஜடேஜா, பிரக்யன் ஓஜா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அஷ்வின் மற்றும் ஜடேஜா இன்றைய அணியில் முதன்மை ஸ்பின்னர்களாக ஜொலிக்கிறார்கள்.

இதையும் படிங்க:தோனி ஓய்வு பெற்ற நாளிலேயே விடை பெற்றது ஏன்? உணர்ச்சிகரமான பின்னணியை பகிர்ந்த சுரேஷ் ரெய்னா

அப்படி தனது கேரியரின் கடைசி காலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு அஷ்வின் முக்கிய காரணமாக இருந்ததால் அந்த கோபத்தையும் வன்மத்தையும் இது போல் பலமுறை ஹர்பஜன் சிங் சமீப காலங்களில் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக தோனியையே மறைமுகமாக சமீப காலங்களில் விமர்சித்திருந்த அவர் தற்போது அஷ்வின் மீது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement