மகளிர் ஐபிஎல் 2023 : முதல் போட்டியிலேயே அதானி குஜராத் அணி பித்தலாட்டம், வெ.இ வீராங்கனை வேதனை – விளாசும் ரசிகர்கள்

- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப்போகும் மகளிர் ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் ஐபிஎல் தொடருக்கு நிகராக நடைபெறுகிறது. பல நட்சத்திர வெளிநாட்டு வீராங்கனைகளுடன் 5 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் மார்ச் 4ஆம் தேதியன்று மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் பவுலர்களை புரட்டி எடுத்து 207/5 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 14 பவுண்டரியுடன் 65 (30), ஹேய்லே மேத்தியூஸ் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 47 (32), எமிலியா கெர் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45* (24) ரன்கள் என முக்கிய வீராங்கனைகள் அதிரடியாக ரன்களை குவித்தனர். சுமாராக செயல்பட்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 208 ரன்களை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் பெத் மூனி ஆரம்பத்திலேயே காயமடைந்து வெளியேறிய நிலையில் மேக்னா 2, தியோல் 0, கார்ட்னர் 0 என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதிகபட்சமாக ஹேமலதா 29* (23) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

வேதனையில் டோட்டின்:
அதனால் 15.1 ஓவரிலேயே குஜராத்தை 64 ரன்களுக்கு சுருட்டி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பைக்கு அதிகபட்சமாக சைகா இசாய்க் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அப்படி விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே மிகப்பெரிய சர்ச்சையும் எழுந்துள்ளது. அதாவது குஜராத் அணி வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் வீராங்கனை தியேந்திரா டோட்டினை 60 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.

இருப்பினும் கடைசி நேரத்தில் அவர் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீராங்கனை கிம் கார்த் ஒப்பந்தம் செய்யப்படுவதாக முதல் போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக குஜராத் அறிவித்தது. இது பற்றி குஜராத் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது பின்வருமாறு. “அதானி குஜராத் ஜெயிட்ன்ஸ் நிர்வாகம் முதல் மகளிர் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக ஒரு மாற்று வீராங்கனை பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறது”

- Advertisement -

“வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் தியேந்திரா டோட்டின் மோசமான மருத்துவ சூழ்நிலைகளில் குணமடைந்து வருவதால் அவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் கிம் கார்த் சேர்க்கப்பட்டுள்ளார். தியேந்திரா டோட்டின் மிக விரைவில் குணமடைய அதானி குஜராத் ஜெய்ன்ட்ஸ் வாழ்த்துகிறது. அதே சமயம் கிம் கார்த்தை வரவேற்கிறது” என்று கூறியுள்ளது. அந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் முதல் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாகவே இப்படி ஒரு நிலைமையை சந்தித்த தியேந்திரா டோட்டின் விரைவில் குணமடைந்து மீண்டும் களமிறங்கி விளையாட வேண்டுமென தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இருப்பினும் என் மீது அன்பு காட்டும் அனைவருக்கும் நன்றி ஆனால் உடல் அளவில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலைமை நான் எதிலிருந்து குணமடைய வேண்டும் என்று இது பற்றி தியேந்திரா டோட்டின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது தமக்கு காயம் உட்பட எந்த பிரச்சனையும் இல்லாத போதும் காயம் என்ற பெயரில் குஜராத் அணி நிர்வாகம் கழற்றி விட்டதாக தியேந்திரா டோட்டின் குஜராத் அணியின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இதை கடவுளின் கைகளில் விடுவதாகவும் கடவுள் தூங்காமல் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என நம்புவதாகவும் தியேந்திரா டோட்டின் தெரிவித்துள்ளது குஜராத் அணி மீது ரசிகர்களிடையே அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் பிடிக்கவில்லை என்றால் ஒன்று ஆரம்பத்திலேயே வாங்காமல் இருந்திருக்க வேண்டும் அல்லது பெஞ்சில் அமர வைத்திருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு காயம் என்ற பெயரில் கழற்றி விட்டு அவரை அவமானப்படுத்தி பித்தலாட்டம் செய்வதாக குஜராத் நிர்வாகத்தை ரசிகர்கள் சாடுகிறார்கள்.

இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல் 2023 : முதல் போட்டியிலேயே மும்பை முரட்டு வெற்றி, ரசிகர்கள் அறியாத புதிய விதியை பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத்

அதையும் தாண்டி சமீபத்தில் பங்குச் சந்தையில் அதானி குழுமம் செய்த குளறுபடிகள் அம்பலமான நிலையில் அதே போல ஐபிஎல் தொடரிலும் பித்தலாட்டம் நடைபெறுவதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே குஜராத்தை கலாய்க்கிறார்கள்.

Advertisement