
வரலாற்றுச் சிறப்புமிக்க 2022 ஐசிசி டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பெற்ற வரலாற்று தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் அனல் பறந்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் போன்ற முக்கிய வீரர்களின் சொதப்பலுக்குப் பின் ஷான் மசூட் 52* ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்தது.
அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று மூழ்கிய இந்தியாவை விராட் கோலியுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா வெற்றி பாதைக்கு அழைத்து வந்து கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவர்கள் எங்கே:
போதாக்குறைக்கு கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக்கும் பொறுப்பின்றி அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் கடைசி பந்தில் அறிவுபூர்வமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மேலே தூக்கி அடித்து 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றிக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் 11 வீரர்களும் முக்கிய பங்காற்றினாலும் ஒரு கட்டத்தில் கதை முடிந்தது என்று கருதப்பட்ட இந்தியாவைத் தன்னுடைய அபார பேட்டிங்கால் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து தனி ஒருவனாக காப்பாற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதையும் மிஞ்சிய செயல்பாட்டை வெளிப்படுத்தினார் என்றே கூறலாம்.
ஏனெனில் தொடர்ந்து 140 – 150 கி.மீ வேகத்தில் வீசிய பவுலர்களிடம் பாண்டியாவை தவிர அனைவரும் சரணடைந்த போது சிங்கம் போல் கர்ஜித்த அவர் 2012, 2015, 2016 ஆகிய உலக கோப்பைகளில் எப்படி பாகிஸ்தானை தோற்கடித்து ஆட்டநாயகன் விருதை வென்றாரோ அதே போல் மீண்டும் ஒருமுறை தோற்கடித்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். அதனால் தீபாவளி திருநாளான இன்று அந்த பண்டிகையை 100க்கு 200% மகிழ்ச்சியுடன் இந்திய ரசிகர்கள் கொண்டாடுவதற்கு விராட் கோலி முக்கிய காரணமாக திகழ்கிறார்.
ஆனால் இதே இந்தியாவில் சில ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடந்த மாதம் அவரை இதே டி20 உலக கோப்பையிலிருந்து அதிரடியாக நீக்குமாறு போர்க்கொடி உயர்த்தியதை இப்போது நினைக்கும் விராட் கோலியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை விட வலியே அதிகமாகிறது. ஆம் 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து தரமான பவுலர்களையும் அபாரமாக எதிர்கொண்ட அவர் 33 வயதிலேயே 24000+ ரன்களையும் 71 சதங்களை விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தன்னை ஜாம்பவானாக நிரூபித்தாலும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்தார்.
அப்போது ரிக்கி பாண்டிங் முதல் பாபர் அசாம் வரை வெளிநாட்டவர்கள் கூட ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் அதுவரை பெற்றுக்கொடுத்த நன்றியை மறந்து கஷ்டமான காலத்தில் ஆதரவு கொடுக்காமல் கபில் தேவ், அஜய் ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்கள். அந்த அளவுக்கு தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ள விராட் கோலி அதற்காக கோபித்துக் கொள்ளாமல் ஆசிய கோப்பையில் சதமடித்து பார்முக்கு திரும்பினார்.
ஆனால் இந்த உலக கோப்பையில் 50 – 100 போன்ற ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று சுயநலமாக விளையாடாமல் இந்தியா கோப்பையை வெல்லும் வகையில் விளையாடுமாறு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடந்த சில தினங்களுக்கு முன் மனசாட்சியின்றி விமர்சித்திருந்தார்.
ஆனால் அதற்கும் செவி சாய்க்காத விராட் கோலி சூரியனைப் போல் இன்று தேசத்துக்காக வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் எங்கே என்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் காட்டத்துடன் விமர்சிக்கிறார்கள். இப்போது விராட் கோலி பெயரை குறிப்பிட்டு பாராட்ட மனமில்லாமல் கம்பீர் மீண்டும் வன்மத்தை காட்டியுள்ளார்.