வீடியோ : இதுக்கு பழசே பரவால்ல, 2023 சீசனுக்காக லக்னோ வெளியிட்ட புதிய ஜெர்ஸி இதோ – எப்படி இருக்கு சொல்லுங்க?

LSG Jersey
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகள் கோப்பைக்காக களமிறங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. முன்னதாக கடந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 2 அணிகளில் வரலாற்றிலேயே 7090 கோடி என்ற அதிக தொகைக்கு வாங்கப்பட்ட அணியாக சாதனை படைத்த லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியது.

கூடவே முன்னாள் நட்சத்திர இந்திய வீரர் கௌதம் கம்பீர் ஆலோசனையுடன் லீக் சுற்றில் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான அணிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்ட லக்னோ முதல் சீசனிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அசத்தியது. ஆனால் பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி முதல் வருடத்திலேயே குஜராத் போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் கடந்த வருடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு இந்த வருடம் கோப்பையை வெல்ல தயாராகி வரும் அந்த அணி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை 16 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

- Advertisement -

புதிய ஜெர்ஸி:
ஆனால் கடந்த சில வருடங்களாகவே மோசமாக செயல்பட்டு வருவதால் விலை போக மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு லக்னோ வாங்கியது ரசிகர்களிடையே கிண்டல்களை ஏற்படுத்தியது. இருப்பினும் விரைவில் 30 வயதை தொடப்போகும் அவர் தனது கேரியரின் உச்சகட்ட செயல்பாடுகளை தங்களது அணியில் வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வாங்கியதாக ஆலோசகர் கௌதம் கம்பீர் தெளிவுபடுத்தினார். இந்நிலையில் 2023 சீசனில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி முதல் கோப்பையை வெல்வதற்காக தங்களது அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் வெளிர் கடல் வண்ண ஊதா நிறத்தில் வெளியிடப்பட்ட அந்த அணி ஜெர்ஸி இதர அணிகளை விட சுமாராகவே இருந்ததாக ரசிகர்கள் கிண்டலடித்தனர். அதன் காரணமாக ஒரு வருடம் கூட ஓடாத அந்த ஜெர்சியை மாற்றியுள்ள லக்னோ நிர்வாகம் தற்போது பச்சை நிறம் கலந்த அடர் ஊதா நிறத்தில் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஜெர்சிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத வகையில் தற்போதைய புதிய ஜெர்சி முற்றிலும் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பக்கவாட்டு பகுதிகளில் சிவப்பு நிறங்களில் பட்டையான கோடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜெர்சியை லக்னோ அணி நிர்வாகத்தினருடன் ஆலோசகர் கௌதம் கம்பீர், கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இன்று நடைபெற்ற பிரத்தியேக விழாவில் வெளியிட்டார்கள். இதை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் “இதற்கு கடந்த வருடம் இருந்த ஜெர்சியே எவ்வளவு பரவாயில்லை” என்பது போல் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இதை பார்ப்பதற்கு 2013 வாக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஜெர்சி போல இருப்பதாகவும் சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதிலும் சில ரசிகர்கள் இதற்கு பஞ்சாப் அணியின் ஜெர்சி பரவாயில்லை என்றும் கலாய்த்து வருகிறார்கள். முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்து (17 கோடி) லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் கடந்த வருடம் 616 ரன்களை குவித்தாலும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: IND vs AUS : ஸ்பின்னிங் பிட்ச்ல ரன்களை அடிக்க இதை செய்ங்க – இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கவாஸ்கர் முக்கிய ஆலோசனை

அந்த நிலையில் தற்போது பார்மை இழந்து இந்திய அணியில் கழற்றி விடப்பட்டுள்ள அவர் தனது இடத்தை மீண்டும் பிடிப்பதற்கு 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு அதிரடியாக பெரிய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement