IND vs AUS : ஸ்பின்னிங் பிட்ச்ல ரன்களை அடிக்க இதை செய்ங்க – இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கவாஸ்கர் முக்கிய ஆலோசனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்த தொடரில் சுழல் பந்து வீச்சு துறையில் மிரட்டலாக செயல்படும் இந்தியாவுக்கு பேட்டிங் துறையில் விராட் கோலி உள்ளிட்ட பெரும்பாலான முதன்மை பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்காமல் சொதப்பலாக செயல்படுவது பின்னடைவாக இருந்து வருகிறது.

Pujara

- Advertisement -

சொல்லப்போனால் முதல் போட்டியில் சதமடித்த ரோகித் சர்மாவும் எஞ்சிய போட்டிகளில் தடுமாறும் நிலையில் அக்சர் பட்டேல், அஷ்வின், ஜடேஜா ஆகிய 3 லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாமல் போயிருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும் என்றே சொல்லலாம். பொதுவாகவே சுழலுக்கு சாதகமான மைதானங்களில் பிறந்து வளர்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் இயற்கையாகவே தரமான ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் திறமையை கொண்டிருப்பார்கள். ஆனாலும் இந்த தொடரில் கிட்டத்தட்ட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் டோட் முர்பி, மேத்தியூ குனேமான் போன்ற தற்போது அறிமுகமாகி ஓரிரு போட்டியில் மட்டுமே விளையாடிய ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

கவாஸ்கர் ஆலோசனை:
இந்நிலையில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்திலும் சுழலுக்கு சாதகமான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை பற்றி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 1987ஆம் ஆண்டு பெங்களூருவில் தம்முடைய கேரியரின் கடைசி போட்டியில் சவாலான பிட்ச்சில் 264 பந்துகளை எதிர்கொண்டு 96 ரன்கள் குவித்த தருணங்களை நினைவு கூர்ந்து இந்த ஆலோசனை தெரிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Jadeja

“இது போன்ற சூழ்நிலைகளில் உங்களுடைய மேல் கை பேட்டை வழி நடத்த வேண்டும். உங்களுடைய கீழ் கை பேட்டின் வேகத்தை முடிவு செய்ய வேண்டும். எனவே தடுப்பாட்டத்திற்கு தேவையான பேட்டிங் செய்ய உங்களுடைய கீழ் கை பேட்டின் கைப்பிடியை மிகவும் லேசாக பிடித்திருக்க வேண்டும். அதனால் உங்களது மேல் கையை பயன்படுத்தி நேராக அல்லது கால்களுக்கு குறுக்கே என நீங்கள் விரும்பும் கோணத்தில் பேட்டை பயன்படுத்தலாம். அதே போல் சற்று குனிந்தவாறு இருப்பது பந்தை மிகவும் அருகில் எதிர்கொள்வதற்கு உதவும்”

- Advertisement -

“எடுத்துக்காட்டாக ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பவுன்ஸ்க்கு ஏற்றவாறு கொஞ்சம் குனிந்து செயல்படுவது போல பேட்ஸ்மேன்களும் அதிகமாக அல்லாமல் தேவையான அளவு குனிந்து பேட்டிங் செய்ய வேண்டும். தலையை பந்து வரும் கோணத்தில் தொடர்ந்து வைத்திருக்கும் போது எதை விளையாடலாம் என்ற தெளிவு கிடைக்கும். குறிப்பாக முன்னோக்கி விளையாடலாமா அல்லது பின்னங்காலில் விளையாடலாமா என்பதில் தெளிவு இருக்கும். அத்துடன் சற்று முன்னே நின்று விளையாட முயற்சிப்பது இது போன்ற சுழலுக்கு சாதகமான மைதானங்களில் உங்களுக்கு எந்த பயனையும் ஏற்படுத்தாது”

gavaskar 1

“எனவே கீப்பர் போல சற்று குனிந்தவாறு பேட்டிங் செய்யும் போது பவுன்ஸ், சுழல் ஆகியவற்றை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். என்னுடைய கடைசி போட்டியில் இதே போல் விளையாடிய போது சில்லி பாயிண்ட் திசையில் நின்று கொண்டிருந்த ஜாவேத் மியான்தத் பந்தில் அடி வாங்குவதற்கும் தயாராக நின்றார். இது போன்ற பிட்ச்களில் பேட்டின் பிடியை சற்று மேலே பிடித்திருப்பது உங்களுக்கு மிகப்பெரிய கூடுதல் பலத்தை கொடுக்கும். குறிப்பாக அது டிரைவ் அடிக்கும் போது காற்றில் பந்து செல்லாதவாறு பார்த்துக் கொள்ளும்”

இதையும் படிங்க:ஐசிசி அவார்ட் வாங்கிட்டா போதுமா? இங்கிலிஷ் பேச தெரியல வெற்றியும் வரல – பாபர் அசாமை விளாசும் முன்னாள் பாக் வீரர்

“அதே போல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் போது உங்களது கீழ் கையை சறுக்கியவாறு தோள்பட்டை நோக்கி நகர்த்த வேண்டும். குறிப்பாக பின்னங்களில் இருந்து தடுப்பாட்டம் விளையாடும் போது பந்து மேலே குதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement