கப் வாங்கிடுவாங்க போலயே – துபாய் டி20 தொடரில் மும்பையின் தரமான 14 வீரர்கள் அணியை பார்த்து வியக்கும் ரசிகர்கள்

Nita Ambani MI
- Advertisement -

ஐபிஎல் தொடரின் பிரமாண்ட வளர்ச்சியை பார்த்து உலகம் முழுவதிலும் உள்ள இதர கிரிக்கெட் வாரியங்கள் ஆளாளுக்கு டி20 தொடர்களை உருவாக்கி நடத்தி வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சமீப காலங்களில் தங்களது நாட்டில் பிரீமியர் லீக் டி20 தொடரை நடத்தி வரும் போதிலும் அவர்களால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை. அதிலும் இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட டி20 தொடர்கள் வெற்றி அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த நிலைமையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய 2 நாட்டு வாரியங்கள் இந்த வருடம் புதிதாக டி20 தொடரை உருவாக்கியுள்ளன.

வரும் ஜனவரி 2023இல் நடைபெறும் இந்த 2 தொடர்களிலும் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் தொடர்களில் அணிகளை வைத்துள்ள உரிமையாளர்கள் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளனர். சர்வதேச டி20 லீக் என்ற பெயரிடப்பட்டுள்ள துபாய் தொடரில் பங்கேற்கும் 6 அணிகளில் இந்திய நிர்வாகங்கள் 4 வாங்கியுள்ள நிலையில் டி20 சேலஞ்ச் என்ற பெயரில் தென்னாபிரிக்கா உருவாகியுள்ள டி20 தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் சென்னை, மும்பை, ஹைதராபாத், லக்னோ, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 6 ஐபிஎல் அணி நிர்வாகங்கள் மொத்தமாக வாங்கியுள்ளன.

- Advertisement -

எம்ஐ எமிரேட்ஸ்:
அதில் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இந்த 2 தொடர்களிலும் அணிகளை வாங்கியுள்ளது. அதற்கு “எம்ஐ கேப் டவுன்” மற்றும் “எம்ஐ எமிரேட்ஸ்” என புதிய பெயர்களை சூட்டியுள்ள அந்த அணி நிர்வாகம் அடுத்ததாக தங்களது அணிக்கு விளையாடும் வீரர்களை வாங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி தங்களது அணியில் விளையாடும் தூணை போன்ற 4 – 5 முக்கிய வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக இருப்பதே மும்பையின் வெற்றி ரகசியமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் விளையாடும் தங்களது கேப் டவுன் அணியில் ரசித் கான், லியம் லிவிங்ஸ்டன், சாம் கரண், காகிஸோ ரபாடா, தேவால்ட் ப்ரேவிஸ் ஆகிய தரமானவர்களை முதல்கட்ட வீரர்கள் தேர்வில் வாங்கியுள்ளது. அதேபோல் துபாய் டி20 தொடரில் டுவைன் பிராவோ, கைரன் பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன் ஆகியோரை முதல் கட்ட தேர்வில் அந்த அணி வாங்கியதாக நேற்று செய்திகள் வெளியாகியது.

- Advertisement -

14 வீரர்கள்:
இந்த நிலைமையில் சர்வதேச டி20 லீக் என்ற பெயரிடப்பட்டுள்ள ஐக்கிய அரபு நாட்டு டி20 தொடரில் அபுதாபியை மையமாகக் கொண்ட தங்களது புதிய அணியில் விளையாடும் 14 முழுமையான வீரர்களையும் வாங்கியுள்ள எம்ஐ எமிரேட்ஸ் அணி நிர்வாகம் இன்று அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கைரன் பொல்லார்ட், ட்வயன் ப்ராவோ, நிக்கோலஸ் பூரன் ஆகியோருடன் நியூசிலாந்தின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், தென்னாபிரிக்காவின் சீனியர் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், அனுபவ வீரர் சமீத் படேல் ஆகியோரை வாங்கியுள்ள அந்த அணி நிர்வாகம் ஜோர்டான் தாம்சன், வில் ஸ்மெட், ஜாகிர் கான் போன்ற திறமையான இளம் வீரர்களையும் வாங்கியுள்ளது.

எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 14 வீரர்களின் விபரம் இதோ:
கைரன் பொல்லார்ட், ட்வயன் ப்ராவோ, நிக்கோலஸ் பூரன், ஆன்ரூ பிளக்சர் (வெஸ்ட் இண்டீஸை சேர்ந்தவர்கள்) இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா), சமித் படேல், வில் ஸ்மெட், ஜோர்டான் தாம்சன் (இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்), நஜிபுள்ள ஜாட்ரன், ஜாஹீர் கான், பாசல்ஹக் பாரூக்கி (ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்), பிராட்லி வ்ஹெல் (ஸ்காட்லாந்து), பஸ் டீ லீட்லி (நெதர்லாந்து)

ரசிகர்கள் மகிழ்ச்சி:
இந்த தொடரில் ஒரு அணியில் 9 வீரர்கள் வெளிநாட்டவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய 2 வீரர்களில் ஒருவர் அமீரகம் மற்றும் ஒருவர் துணை நாடுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 11 பேர் விளையாட உள்ளனர். அந்த வகையில் இந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக போற்றப்படும் நிலையில் எஞ்சியோர் திறமையான இளம் வீரர்களாக இருக்கின்றனர்.

எனவே அனுபவமும் இளமையும் கலந்த இந்த அணி ஐபிஎல் தொடரில் மும்பையை போலவே வலுவான அணியாக இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று இந்த அமீரக டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஆழமாக கால் பதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

Advertisement