IND vs WI : வித்யாசமான பேட்டிங், ரிஷப் பண்ட் செயலால் கோபமடைந்த கேப்டன் ரோஹித் – முழுவிவரம் & வீடியோ இதோ

Rishabh Pant
- Advertisement -

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் ஆகஸ்ட் 6-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 8.45 மணிக்கு நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா தோற்கடித்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 191/5 ரன்கள் சேர்த்தது.

இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 33 (16) ரன்களும் சூரியகுமார் யாதவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (14) ரன்களும் விளாசி 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா 21 (19) ரன்களும் ரிஷப் பண்ட் 6 பவுண்டரியுடன் 44 (31) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 6 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் இறுதியில் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30* (23) ரன்களும் அக்சர் பட்டேல் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 20* (8) ரன்களும் எடுத்து நல்ல பினிசிங் கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அதனால் 192 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 13 (8) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டேவோன் தாமஸ் 1 (4) ரன்னில் நடையை கட்டினார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 24 (8), மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 14 (16), ரோவ்மன் போவல் 24 (16), சிம்ரோன் ஹெட்மையர் 19 (19), ஜேசன் ஹோல்டர் 13 (9) என அனைத்து முக்கிய வீரர்களும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் 19.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் காரணமாக அபார வெற்றி இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் தொடரை முன்கூட்டியே கைப்பற்றி கோப்பையை உறுதி செய்துள்ளது. மேலும் கடந்த 2021 டி20 உலகக்கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியே சந்திக்காமல் அனைத்து தொடர்களையும் வென்று இந்திய அணி வெற்றி நடை போட்டு வருகிறது.

- Advertisement -

கோபமடைந்த ரோஹித்:
முன்னதாக இப்போட்டியில் 192 ரன்களை சேசிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு பிரண்டன் கிங், டேவோன் தாமஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் 22/2 என ஆரம்பத்திலேயே அந்த அணி திணறியது. அப்போது களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுமை வேலைக்கு ஆகாது என்ற வகையில் அக்ஷர் பட்டேல் வீசிய 5-வது ஓவரில் 4, 6, 0, 6, 6 என முதல் 5 பந்துகளில் 22 ரன்கள் தெறிக்கவிட்டு மிரட்டினார்.

ஆனால் கடைசி பந்தில் அவசரப்பட்ட அவர் சிங்கிள் எடுக்க முயன்றபோது பிட்ச்சின் பாதி தூரத்திற்கு சென்று விட்டு எதிர்ப்புறம் இருந்த கெய்ல் மேயர்ஸ் ரன் எடுக்க வராததால் திரும்ப முயற்சித்தார். ஆனால் அதற்குள் பந்தை எடுத்த சஞ்சு சாம்சன் டைவ் அடித்து கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் போட்டார். அதை கச்சிதமாக பிடித்த அவர் உடனடியாக ஸ்டம்ப்பில் அடிக்காமல் நிக்கோலஸ் பூரன் திரும்பி வருகிறாரா என்று வேடிக்கை பார்க்கும் வகையில் குறைந்தது 5 – 7 நொடிகள் ஜாலியாக நின்று கொண்டிருந்தார்.

இருப்பினும் அவுட் என உறுதியாக தெரிந்ததால் நிக்கோலஸ் பூரன் வராத நிலையில் ஸ்டம்ப்பின் பெய்ல்ஸ் எடுக்காமல் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட்டை நோக்கி கோபத்துடன் வந்த கேப்டன் ரோகித் சர்மா “இதில் என்ன விளையாட்டு உடனடியாக அவுட் செய்” என்ற வகையில் திட்டினார். அதன் பின்பே ரிஷப் பண்ட் பெய்ல்ஸை நீக்கினார். பொதுவாகவே விளையாட்டுத்தனமாக ஜாலியாக செயல்படும் வீரராகக் கருதப்படும் ரிஷப் பண்ட் செய்த இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வித்யாசமான பேட்டிங்:
மேலும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை பெரிய அளவில் சாதிக்காமல் விமர்சனங்களை சந்தித்து வரும் ரிஷப் பண்ட் கடந்த இங்கிலாந்து டி20 தொடர் முதல் பேட்டிங் வரிசையில் சற்று மேலே களமிறக்கப்பட்டு வருகிறார். அதில் ஓரளவு முன்னேற்றத்தை கண்டு வரும் அவர் இப்போட்டியில் முக்கியமான 44 ரன்கள் எடுத்த போது ஒய்ட் போல வந்த ஒரு பந்தை எட்டிப் பிடித்து எகிறியடிக்க முயற்சித்தார். அதற்காக ஒற்றைக்காலில் நின்றவாரே பேட்டிங் செய்த அவர் அடித்த அந்த வித்தியாசமான ஷாட்டும் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement