முதல் கப்’பே எங்களுக்கு தான், மந்தனா போன்ற தரமான வீராங்கனைகளை வாங்கி – மாஸ் காட்டும் ஆர்சிபி ரசிகர்கள்

RCB Women
- Advertisement -

தரமான இளம் வீராங்கனைகளை கண்டறிந்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இன்னும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் திண்டாடி வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்துவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதை தொடர்ந்து மும்பை, பெங்களூரு, டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய 5 நகரங்களை மையப்படுத்திய அணிகளை மும்பை இந்தியன்ஸ் போன்ற அணி நிர்வாகங்கள் வாங்கின. அந்த நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி இத்தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடைபெற்றது.

உலகம் முழுவதிலுமிருந்து 409 வீராங்கனைகள் களமிறங்கிய அந்த ஏலத்தில் இந்தியாவிலிருந்து 246 வீராங்கனைகள் இடம் பிடித்திருந்தனர். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் 163 வீராங்கனைகள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர இளம் தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் மும்பை உள்ளிட்ட இதர அணிகளுடன் கடுமையாக போட்டி போட்டு இறுதியில் 3.4 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. அதனால் மகளிர் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன்ற வீராங்கனை என்ற சாதனையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

- Advertisement -

வெறித்தனமான ஆர்சிபி:
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தனது மிகச் சிறந்த திறமையால் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் நம்பர் ஒன் கிரிக்கெட் வீராங்கனையாக போற்றப்படுகிறார். குறிப்பாக பெங்களூரு அணியின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி மற்றும் இவரது ஜெர்சி நம்பர் 18 என்பதும் மிகப்பெரிய ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டரான எலிஸ் பெரியை 1.7 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிய பெங்களூரு நியூசிலாந்தின் அதிரடி வீராங்கனை மற்றும் கேப்டன் சோபி டெவினை வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு வளைத்து போட்டது.

இந்த மூவருமே 100க்கும் மேற்பட்ட சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். அத்துடன் 2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெள்ளி பதக்கம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய இளம் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு பெங்களூரு வாங்கியுள்ளது. இவரை ஏற்கனவே இந்திய ரசிகர்கள் ஸ்விங் ராணி என்றழைக்கிறார்கள். அது போக மற்றொரு இளம் அதிரடி வீராங்கனை ரிச்சா கோஸை 1.9 கோடி என்ற பெரிய தொகைக்கு பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியது.

- Advertisement -

இவர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் திறமையை கொண்டவர். குறிப்பாக 2023 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிகளிலேயே அதிரடியான ஃபினிஷிங் செய்து அசத்தியவர். இது போக எரின் பர்ன்ஸ் போன்ற மேலும் சில வீராங்கனைகளை பெங்களூரு வாங்கியுள்ளது. மேலும் இதே ஏலத்தில் மும்பை, டெல்லி உள்ளிட்ட இதர அணிகளை காட்டிலும் தரமான வீராங்கனைகளை வாங்கி அடிப்படையை வலுவாக அமைத்துள்ள அணியாக பெங்களூரு கருதப்படுகிறது.

இதை பார்க்கும் ரசிகர்கள் ஆடவர் ஐபிஎல் தொடரை விட மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே தரமான வீரர்களை பெங்களூரு வாங்கியுள்ளதாக பாராட்டு தெரிவிக்கிறார்கள். அதனால் ஆடவர் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதற்கு முன்பே மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் கோப்பை நிச்சயமாக பெங்களூரு அணி வெல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

சொல்லப்போனால் 2008 முதல் கிறிஸ் கெயில், விராட் கோலி உள்ளிட்ட எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடியும் பலமுறை சொதப்பலாக செயல்பட்டு ஒரு சில வருடங்களில் ஃபைனல் வரை சென்று கோப்பையை தொட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்த பெங்களூரு அதிக கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.

இதையும் படிங்கபோதுங்க. நான் விளையாடுன வரைக்கும் போதும். ஓய்வை அறிவித்த – இங்கிலாந்து அணியின் கேப்டன்

ஆனால் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் ஸ்மிரிதி மந்தனா போன்ற தரமான வீராங்கனைகளை வாங்கியுள்ள பெங்களூரு தங்களது அணியின் ஆணிவேரை பலப்படுத்தியுள்ளதால் முதல் தொடரிலேயே கோப்பை வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement