இங்கேயும் தடவலா? ரன்கள் தான் அடிக்கல அதை கூட ஒழுங்கா செய்ய தெரியாதா – ராகுலை மீண்டும் கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் மாஸ்டர் க்ளாஸ் ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அசாத்தியமான வெற்றி பெற்றது. அந்த வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக சந்தித்த வரலாற்று தோல்விக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து பழிதீர்த்த இந்தியா தன்னுடைய லட்சிய பயணத்தில் அடுத்ததாக கத்துக்குட்டி நெதர்லாந்தை 2வது போட்டியில் எதிர்கொண்டது.

அக்டோபர் 27ஆம் தேதியன்று புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அத்துடன் கத்துக்குட்டியான நெதர்லாந்துக்கு எதிராக முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பேர் கொண்ட அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் அறிவித்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
ஆனால் அந்த முயற்சியில் வழக்கம் போல தடவலை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 12 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் வெறும் 9 ரன்களில் அவுட்டாகி சென்றது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 160 ரன்களை துரத்திய போது தொடக்க வீரராக குறைந்தது 30 ரன்கள் எடுத்துக் கொடுத்திருக்க வேண்டிய அவர் அவுட்டாகி விடுவோமோ என்ற பதற்றத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் எடுத்து எட்ஜ் வாங்கி போல்ட்டாகி சென்றார்.

இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷின் என்றழைக்கப்படும் இவர் கடந்த 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி, 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி, 2022இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டி என முக்கியமான அழுத்தம் வாய்ந்த பெரிய போட்டிகளில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் தடுமாறினார் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்து பவுலர்களை கூட எதிர்கொள்ள முடியாமல் சொதப்பிய அவர் அவுட்டான விதம் ரசிகர்களை மேலும் கடுப்பாக இருக்கிறது.

- Advertisement -

ஆம் பால் வன் மிக்கீரேன் வீசிய 3வது ஓவரின் 4வது பந்தை தடுக்க தவறிய அவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். இருப்பினும் அந்தப் பந்து லெக் ஸ்டம்பில் கூட படாமல் நகர்ந்து சென்றதாக ஆரம்பத்திலேயே தெரிந்தது. அப்போது குழப்பத்தை திருத்திக்கொள்ள எதிர்ப்புறமிருந்த கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் ஆலோசித்து ரிவியூ எடுக்க வேண்டிய அவர் அதை சரியாக செய்யாமல் உறுதியாக அவுட் தான் என நினைத்துக்கொண்டு பெவிலியன் திரும்பினார்.

ஆனால் டிவி ரீப்ளேயில் அது அவுட்டில்லை என்று தெரிய வந்ததால் கடுப்பான ரசிகர்கள் “ரன்களை தான் எடுக்க தடுமாறுகிறீர்கள் என்றால் ரிவியூயை கூட ஒழுங்காக எடுக்க தெரியாதா” என்ற வகையில் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அதே சமயம் “இவர் அவுட்டாகி சென்றதும் பரவாயில்லை அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக அடிப்பார்கள்” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களையும் பார்க்க முடிகிறது. அதே போல அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மறுபுறம் வெளுத்து வாங்கிய கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 53 (39) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவர் அவுட்டானதும் களமிறங்கிய சூரிய குமாருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62* (44) ரன்களை குவித்து அசத்தினார். அவருடன் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51* (25) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவர்களில் இந்தியா 179/2 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

Advertisement