
ஐசிசி 2024 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. மறுபுறம் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. 1992 சாம்பியனான பாகிஸ்தான் சமீப காலங்களாகவே தடுமாறுவதுடன் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்து வருகிறது.
அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் மீண்டும் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.
மாஸ் பயிற்சி:
அதன் காரணமாக வழக்கம் போல பாகிஸ்தான் அணி கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தது. முன்னதாக 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக லாகூரில் ராணுவத்துடன் சேர்ந்து ஸ்பெஷல் பயிற்சியை மேற்கொண்டது. குறிப்பாக மலை ஏறுதல், கயிற்றில் ஏறுதல் போன்ற ராணுவ வீரர்கள் எடுக்கும் பயிற்சியை பாகிஸ்தான் வீரர்கள் எடுத்தனர்.
அதனால் எதிரணிகளை பந்தாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கடைசியில் அமெரிக்காவிடம் தோற்று வெளியேறியது. அதன் காரணமாக இதற்குத் தான் ராணுவ பயிற்சிகளை எடுத்தீர்களா? என்று பாகிஸ்தான் அணியை அனைவரும் கலாய்த்தனர். இந்த சூழ்நிலையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்புவதற்காக பாகிஸ்தான் அணி கராச்சி நகரில் ஸ்பெஷல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மைதானத்தில் மெத்தையை விரித்து அதில் விழுந்து கேட்ச் பிடிக்கும் பயிற்சியை பாகிஸ்தான் வீரர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக டைவ் அடிக்கும் போது காயம் ஏற்படும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் மெத்தையை பயன்படுத்தி கேட்ச் பிடிக்கும் பயிற்சிகளை செய்து வருகிறார்கள். அதைப் பார்க்கும் ரசிகர்கள் உலகில் யாருமே இப்படி ஒரு புத்திசாலித்தனமான பயிற்சியை எடுத்து பார்த்ததில்லை என மீண்டும் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 விக்கெட்ஸ்.. உத்தப்பா அதிரடி.. யுவராஜ் தலைமையில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய சாம்பியன்ஸ் அணி
ஏனெனில் முதன்மையான போட்டி நடக்கும் மைதானத்தில் எங்கேயும் பஞ்சு மெத்தை விரித்து வைத்திருக்க மாட்டார்கள். எனவே அழுத்தமான முதன்மைப் போட்டிகளில் அசத்துவதற்கு கடினமான பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். ஆனால் இங்கே மெத்தையை விரித்து சுகமாக பயிற்சி எடுத்தால் பின்னர் எப்படி உங்களால் முதன்மையான போட்டியில் அசத்த முடியும்? என்று பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.