ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கௌகாத்தி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 152 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரியான் பராக் 25, துருவ் ஜுரேல் 33, ஜெய்ஸ்வால் 29 ரன்கள் எடுத்தனர்.
அதைத் துரத்திய கொல்கத்தா 17.3 ஓவரில் 153-2 ரன்களை எடுத்து தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரர் டீ காக் சதத்தை நழுவ விட்டாலும் 97* ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் ராஜஸ்தான் இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்து பின்னடைவை சந்தித்துள்ளது.
நியாயம் வேணாமா:
அந்த அணிக்கு இம்முறை சஞ்சு சாம்சன் காயத்தைச் சந்தித்ததால் முதல் 3 போட்டிகளில் கேப்டனாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 – 2023 வரை ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய அவர் கடந்த வருடம் தான் 500+ ரன்கள் குவித்து ஓரளவு அசத்தினார்.
அதன் காரணமாக இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ரியான் பராக் 2024இல் இலங்கையில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஓரளவு சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார். இதைத் தவிர்த்து சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர் எந்த சாதனையையும் படைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்தப் போட்டியில் ஒரு வெறித்தனமான ரசிகர் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு ரியான் பராக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
ரசிகர்கள் அதிருப்தி:
அதைப் பார்த்த மற்ற ரசிகர்கள் “கனவாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” என்ற வகையில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் கடந்தக் காலங்களில் சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கால்களில் தான் இப்படி ரசிகர்கள் பாதுகாப்பை உடைத்துக்கொண்டு ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ள அவர்கள் காலில் விழுந்த ரசிகர்கள் உண்மையானவர்கள் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: பேட்டிங்கில் கோட்டை விட்டாலும் பவுலிங்ல எங்களை காப்பாத்திட்டாரு.. வெற்றிக்கு பிறகு – ரஹானே மகிழ்ச்சி
ஆனால் அந்த ஜாம்பவான்கள் அளவுக்கு ரியான் பராக் அப்படி என்ன சாதனை புரிந்து விட்டார்? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அதன் உச்சமாக ரியான் பராக் 10000 ரூபாய் கொடுத்து அந்தப் பையனை இப்படி காலில் விழச்சொன்னதாக “நிமோ யாதவ்” எனும் ரசிகர் ட்விட்டரில் (எக்ஸ்) வெளிப்படையாகவே பதிவிட்டுள்ளார். மேலும் நிறைய ரசிகர்கள் அந்த தருணத்தை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.



