IND vs WI : பும்ராவுடன் அவரும் சேர்ந்து தெறிக்கவிடுவதை பார்க்க காத்திருக்கோம் – இளம் இந்திய பவுலரை மனதார பாராட்டும் ரசிகர்கள்

Arshdeep Singh IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ட்ரினிடாட் நகரில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (44) ரன்கள் எடுக்க இறுதியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 15, சமர் ப்ரூக்ஸ் 20 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டானார்.

அதனால் ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணியை மிடில் ஆர்டரில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18, ரோவ்மன் போவல் 14, சிம்ரோன் ஹெட்மயர் 14 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 122/8 ரன்கள் மட்டுமே எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங், அஷ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அசத்திய அர்ஷிதீப்:
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நிகழ்ந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆவேஷ் கான் என 2 இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மாறி மாறி அணி நிர்வாகம் கொடுத்த வாய்ப்பில் அந்த இருவரும் மோசமாக பந்து வீசினர். அதனால் கடுப்பான இந்திய ரசிகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் அர்ஷிதீப் சிங்க்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அந்த நிலையில் இந்த டி20 போட்டியில் கிடைத்த வாய்ப்பில் வெறும் 6 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டிய கெய்ல் மேயர்ஸை 15 (6) தனது அற்புதமான பந்தால் அவுட் செய்த அவர் இந்தியாவுக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

மேலும் மொத்தமாக வீசிய 4 ஓவரில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து 6.00 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்துவீசினார். பஞ்சாப்பை சேர்ந்த இவர் கடந்த 2018 வாக்கில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார். இவரின் திறமையை அறிந்த பஞ்சாப் நிர்வாகம் தங்களது அணியில் வளைத்துப் போட்ட நிலையில் 2019இல் தனது ஐபிஎல் கேரியரை தொடங்கிய அவர் 10.90, 8.77, 8.27 என கொஞ்ச கொஞ்சமாக முன்னேறும் வகையில் சிறந்த எக்கனாமியில் பந்துவீச தொடங்கினார்.

- Advertisement -

துல்லியம் தரம்:
அதனால் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட அவர் இந்த வருடம் 14 போட்டிகளில் 10 விக்கெட்களை 7.70 என்ற சூப்பரான எக்கனாமியில் பந்து வீசினார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை பறக்க விட துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா, ரபாடா போன்ற பவுலர்களை காட்டிலும் துல்லியமாக பந்துவீசிய அவர் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்து தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் தேர்வானார். அதில் வாய்ப்பு பெறாத அவரைவிட வேகத்தில் மிரட்டிய உம்ரான் மாலிக் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து மோசமாக பந்து வீசியதால் வந்த வாக்கிலேயே காணாமல் போனார்.

ஆனால் வேகத்தைவிட விவேகம் சிறந்தது என்பதற்கு முன்னுதாரணமாக பொறுமையாக காத்திருந்து இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமான இவர் ஆரம்பகட்டத்தில் புதிய பந்தை ஸ்விங் செய்வது, மிடில் ஓவர்களில் ஷார்ட் பிட்ச் பவுன்சர்களை வீசுவது, கடைசி கட்ட ஓவர்களில் ஸ்லோ பந்துகள், லெக் கட்டர், ஆஃப் கட்டர் உட்பட யுத்திகளையும் ஒன்று சேர கலந்து எதிரணிகளை திணறடிக்கும் வகையில் பந்து வீசுகிறார்.

- Advertisement -

மேலும் இடது கை வேகப்பந்து பந்து வீச்சாளர்கள் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று வல்லுனர்கள் கூறுவார்கள். அந்த வகையில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இவர் இதுவரை 2 போட்டிகளில் 4 விக்கெட்களை 5.6 என்ற அற்புதமான எக்கனாமியில் 10.5 என்ற சூப்பரான சராசரியில் எடுத்து ஆரம்ப காலகட்டத்திலேயே அனுபவம் வாய்ந்தவரைபோல் அட்டகாசமாக பந்து வீசுகிறார்.

பும்ராவுடன் இணைந்து:
எனவே ஜஹீர் கானுக்கு பின் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளரை நோக்கிய இந்தியாவின் நீண்டகால தேடலுக்கு தீர்வாக இவர் கிடைத்துள்ளதாக பாராட்டும் ரசிகர்கள் ஜஸ்பிரித் பும்ராவுக்குப்பின் மிகுந்த சுவாரசியமான பவுலராக காட்சியளிப்பதாக பாராட்டுகின்றனர். இளமை, திறமை, நுணுக்கம், யுக்தி, சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுதல் போன்ற அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ள இவர் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் போல் பந்து வீசும் உணர்வை கொடுப்பதாகவும் ரசிகர்கள் வியக்கின்றனர்.

அதனால் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ் போன்ற வலது கை வேகப்பந்து வீச்சாளர்களுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இவர் சேர்ந்து எதிரணிகளை தெறிக்கவிட்டு இந்தியா உலக கோப்பையை வெல்வதை பார்க்க காத்திருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Advertisement